Friday, January 22, 2010

ரீமாசென்னின் தவிப்பு


‘ஆயிரத்தில்’ ஒருவன் ஓடுதோ இல்லையோ... கல்லா கட்டுதோ இல்லையோ... அந்தப் படத்தில் நடித்த யாருக்கு பேர் இல்லாவிட்டாலும் ரீமாசென்னுக்கு மட்டும் ஏகப்பட்ட பாராட்டுக்களாம். காரணம், இஷ்டத்துக்கு அம்மணி காட்டிய கவர்ச்சிதானாம். படத்தைப் பார்த்துவிட்டு போனைப் போட்டுப் பேசுகிறவர்களும் நேரில் பார்த்து பாராட்டுகிறவர்களும், இரண்டு விதமாகப் பேசுகிறார்களாம். சிலர் இந்தப் படத்தில் ரீமாவின் கவர்ச்சி சூப்பர் என்றும் சிலர் நடிப்பு அருமையாக உள்ளது என்றும் சொல்ல, பாராட்டுமழையில் குளித்தவண்ணம் இருக்கும் ரீமாசென், அடுத்து எந்த மாதிரியான வேடங்களை ஏற்று நடிப்பது என்று புரியாமல் தவிக்கிறாராம். கிளாமரா? நடிப்பா? என்று கையைப் பிசைந்து கொண்டிருக்கும் ரீமா, இப்போதைக்கு எதிர்பார்ப்பதெல்லாம் க்ளாமருடன் நல்ல நடிப்புக்கும் தீனி போடும் கேரக்டர்களைத்தான்.

கவர்ச்சி புயல் ‘அப்பாவி’ நாயகி


அப்பாவி’ படத்தை இயக்கி வருகிறார் ரங்கராஜன். இந்த படத்தின் கதை, இளைஞர்கள் சம்பந்தப்பட்டதாகும். ‘அதற்காக... ஏதோ அட்வைஸ் பண்ற மாதிரியான கதை என்று நினைத்துவிட வேண்டாம்...’ என்று உஷாராகப் பேசுகிறார் இயக்குநர்.

படத்தில் கே. பாக்யராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். இந்தக் கேரக்டர் பேசும்படியாக இருக்குமாம். நாயகன் கௌதம் லையோலா கல்லூரியில் இரண்டாம் வருடம் படிக்கும் மாணவனாக வருகிறார். இந்தப் படத்தின் நாயகி, சுஹானி ஏற்கனவே நான்கு தெலுங்கு படத்தில் நடித்துவிட்டு இப்போது மெல்ல தமிழுக்கு வந்திருக்கிறார். இவர் கவர்ச்சியாக நடிப்பாரா மாட்டாரா என்ற கேள்வியெல்லாம் இவரிடம் கேட்பது அதிகப்பிரசங்கித்தனம் என்றே தெரிகிறது. காரணம், இவர் சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது தூக்கலான கவர்ச்சி உடையுடனே வந்து கலக்குகிறார்.

நிகழ்ச்சியிலே இப்படி என்றால்... படத்திலும் ஓவரான கவர்ச்சி இருக்கும் என்பதில் எந்தவிதத்திலும் சந்தேகம் இல்லை.

அசல், ஜக்குபாய், கோவா, பையா, இரும்புக்கோட்டை 5 படங்கள் ரிலீசுக்கு தயார்


பொங்கலுக்கு ஆயிரத்தில் ஒருவன், குட்டி, நாணயம், போர்க்களம் ஆகிய 4 படங்கள் ரிலீசாயின. அடுத்து அசல், ஜக்குபாய், கோவா, பையா, இரும்புக்கோட்டை முரட்டுச்சிங்கம் ஆகிய மேலும் 5 புது படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன.

கோவா படம் வருகிற 29-ந்தேதி ரிலீசாகிறது. அதே நாளில் இரும்புக்கோட்டை முரட்டுச்சிங்கம் படமும் வருகிறது. கோவா படத்தை ரஜினி மகள் சவுந்தர்யா தயாரித்துள்ளார். வெங்கட்பிரபு இயக்கியுள்ளார்.

இரும்புக் கோட்டை முரட்டுச்சிங்கம் படத்தை சிம்புத்தேவன் இயக்கியுள்ளார். ராகவா லாரன்ஸ், லட்சுமிராய், சந்தியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜக்குபாய் படமும் இம்மாதம் இறுதியில் வெளியாகிறது.

அஜீத்தின் அசல் படம் பிப்ரவரி 5-ந்தேதி திரைக்கு வருகிறது. சிவாஜி பிலிம்ஸ் தயாரித்து உள்ளது. கார்த்தி, தமன்னா ஜோடியாக நடித்த “பையா” படம் பிப்ரவரி 2-வது வாரத்தில் ரிலீஸ் ஆகிறது. லிங்குசாமி இயக்கியுள்ளார்.

கேமராவும் கையுமாக சிம்பு


கோ படத்தில் ஒரு பிரபலமான பத்திரிக்கையின் போட்டோ கிராஃபர் கேரக்டரில் நடிக்கிறார் சிம்பு. சாதாரண பத்திரிக்கையில் வேலை பார்க்கும் ஒரு இளைஞன் அரசியலில் நுழைந்து எப்படி கலக்குகிறார் என்பதை மையமாகக் கொண்டுள்ளது கோ படக்கதை.

அதிரடியான சண்டைக் காட்சிகள் படத்தில் உண்டு என்றாலும், கதை காமெடியாகவே நகருமாம். போட்டோ கிராஃபர் வேடம் என்பதால் தனக்கு நெருக்கமான நிஜ போட்டோ கிராஃபர்களிடம் அவ்வப்போது டிப்ஸ் கேட்டு வருகிறார்.

அதேபோல அரசியல் விஷயங்களை தன் தந்தை விஜய டி.ராஜேந்தரின் ஆலோசனை பக்கபலமாக இருக்கிறது என்கிறார் சிம்பு. முன்புபோல தற்போது சிம்பு இல்லை, மற்றவர்களின் ஆலோசனையை ஏற்கிறார் என்பதே பெரிய விஷயம்.

குஷ்பு பேசியதில் ஆபாசம் இல்லை


திருமணத்திற்கு முந்தைய செக்ஸ் உறவு தொடர்பாக நடிகை குஷ்பு பேட்டியளித்ததில் எந்தவித ஆபாசமும் இல்லை என்று அவரது வக்கீல், சுப்ரீம்கோர்ட்டில் வாதிட்டார்.

திருமணத்திற்கு முந்தைய செக்ஸ் உறவு தொடர்பாக, நடிகை குஷ்பூ அளித்த பேட்டி ஒன்று, 2005ம் ஆண்டு, "இந்தியா டுடே' பத்திரிகையில் வெளியானது. இந்தப் பேட்டி பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியது. தமிழகத்தில் 23 இடங்களில் அவருக்கு எதிராக அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன."இந்த வழக்குகள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து விசாரிக்க வேண்டும். ஆறு மாதங்களில் வழக்கு விசாரணையை முடித்து தீர்ப்பு வழங்க வேண்டும்' என, 2008ம் ஆண்டு ஏப்ரலில் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.இதை எதிர்த்து குஷ்பூ சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனுவில் நடிகை குஷ்பு, பத்திரிகை ஒன்றுக்கு நான் அளித்த பேட்டியின் அடிப்படையில், என்னை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு எனக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அரசியல் சார்புடைய சில அமைப்புகள், அரசியல் ஆதாயம் மற்றும் விளம்பரம் தேடும் நோக்கத்தோடும், 2005ம் ஆண்டில் நடந்த இடைத்தேர்தல்களை கருத்தில் கொண்டும் எனக்கு எதிராக அவதூறு பிரசாரத்திலும் ஈடுபட்டன.அதனால், அனைத்து வழக்குகளையும் ஒன்றாக சேர்த்து விசாரிக்க வேண்டும் என்ற சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், சென்னை ஐகோர்ட்டின் உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்தது. இந்நிலையில், அவரின் மனு நேற்று மீண்டும் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் பாஞ்சால் மற்றும் சவுகான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்தது. அப்போது குஷ்பூவின் வக்கீல் பிங்கி ஆனந்த் கூறுகையில், "திருமணத்திற்கு முந்தைய செக்ஸ் உறவு தொடர்பாக, "இந்தியா டுடே' பத்திரிகை, 2005 செப்டம்பரில் ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்தியாவில் உள்ள அனைத்து பெரிய நகரங்களிலும் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது, இளம் தலைமுறையினருக்கு செக்ஸ் கல்வி போதிக்க வேண்டியதன் அவசியம் பற்றி குஷ்பூ தெரிவித்தார். அவரின் அறிக்கையில் எவ்விதமான ஆபாசமும் இல்லை,'' என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், "குஷ்பூவின் அறிக்கை வரம்பிற்கு அப்பாற்பட்டது. அதை எளிதில் ஏற்க முடியாது. அதனால், அவர் ஏதும் தவறாக கூறவில்லை என்று நீங்கள் எப்படி சொல்கிறீர்கள்? குஷ்பூவிடம் கேட்ட கேள்வி என்ன, அதற்கு அவர் அளித்த பதில் என்ன என்பதை எல்லாம் நாங்கள் பார்க்க வேண்டும். அதனால், குஷ்பூவின் பேட்டி தொடர்பான முழு விவரங்களையும் நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும். அதை நாங்கள் பார்க்க வேண்டும். இரண்டு வாரத்திற்குள் இதைச் செய்ய வேண்டும்' என்றனர்.