Tuesday, December 15, 2009

ஈழத் தமிழர்களின் தயாரிப்பில் நிலா மற்றும் விடியல் திரைப்படங்கள்


ஈழத்தமிழர்களால் தமிழ்நாட்டு மண்ணில் தயாரிக்கப்பட்ட விடியல் மற்றும் கனடிய மண்ணில் தயாரிக்கப்பட்ட நிலா ஆகிய திரைப்படங்கள் டிசம்பர் 19 மற்றும் 20ம் தேதிகளில் 377, பர்ன்ஹாம்தோர்ப் சாலை, மிஸ்ஸிசாகாவில் அமைந்துள்ள சென்ட்ரல் பார்க்வே மால் சினிமா திரையரங்கில் திரையிடப்படவிருகின்றன.

அனைத்து கனடியத் தமிழ் மக்களும் இந்த திரைப்படங்களை பார்த்து ஈழக் கலைஞர்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டுமென கனடியத் தமிழ் திரைப்படக் குழு கோரிக்கை விடுத்துள்ளது.

விடியல் திரைப்படம் முழுக்க முழுக்க தமிழ்நாட்டு மண்ணில் கனடிய ஈழத்துக் கலைஞர்களால் தயாரிக்கப்பட்டது. இந்த திரைப்படத்தில் மனோ, சுதா, கவிதா மற்றும் இயக்குனர் தரன் மற்றும் தமிழ்நாட்டுக் கலைஞர்களும் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்துக்கு தமிழ்நாட்டு இசையமைப்பாளர் உத்ரியன் இசையமைத்துள்ளார். மற்றும் திரைப்படத்தின் பாடல்களை தமிழ்நாட்டு பாடலாசிரியர் காதல்மதி, இயக்குனர் தரன் எழுதியுள்ளனர்.

ஒளிப்பதிவாளராக மோகன், திரு ஆகியோரும், படத்தொகுப்பை பன்னீர்செல்வம், இணை இயக்கம், வசனம் ஜீவரத்தினமும் பணியாற்றியுள்ளனர்.

கதை, திரைக்கதை அமைத்து தரன் இயக்கியுள்ளார். விடியல் திரைப்படத்தை பொன்னுச்சாமி தயாரித்துளார்.

நிலா திரைப்படம் முழுக்க முழுக்க கனடிய மண்ணிலேயே தயாரிக்கப்பட்டது. நிலா திரைப்படத்தில் சுதன், நவநிதா, ருபா, வினோத், விஜய், மாலன், சூரி, ராஜா, சங்கர், ஜிவன், உதயன், ராணி இவர்களுடன் இயக்குனர் தரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்துக்கு இசையமைப்பை அண்மையில் தமிழின படுகொலையைப் பற்றி இதுவே இதுவே நிலையா என்ற பாடலை வெளியீட்ட கனடிய இசையமைப்பாளர் சிறீஜிவன் பாடல்கள் எழுதி இசையமைத்துள்ளார்.

படத்தின் ஒளிப்பதிவாளர் சுஜன் தனது காமரா கண்களால் அழகாக படமாக்கியிருக்கிறார். படத்தொகுப்பை தமிழ்நாட்டில் உள்ள தொழிழ்நுட்பக் கலைஞர் பன்னீர்செல்வம் மற்றும் படத்தின் டப்பிங்கை தமிழ்நாட்டுக் கலைஞர்கள் சினிமாத் தமிழில் பேசியுள்ளனர்.

நிலா திரைப்படத்தின் கதை திரைக்கதை அமைத்து இயக்குனர் வி.எம்.தரன் இயக்கியுள்ளார். படத்தை வி.கந்தசாமி ஜெகன் தயாரித்துள்ளார்.

ஜனவரியில் ஆரம்பிக்கிறது ‘வழக்கு எண் 18/7’

பாலாஜி சக்திவேல் அடுத்து இயக்கவிருக்கும் படம் ‘வழக்கு எண் 18/7 இந்தப் படத்தை லிங்குசாமி தமது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்காகத் தயாரிக்கிறார். படம் முழுக்க முழுக்க கமர்ஷியலாக உருவாகிறது இந்தப் படம்.

படத்தில் புதுமுகம் ஒருவர் நடிக்க உள்ளார். இவருக்கு ஜோடியாக கன்னட நடிகை பிரஜ்னா நடிக்கிறார். காதலும் அதனால் நடைபெறுகிற குற்றமும் அதனால் நடக்கிற வழக்கும் அதன் தீர்ப்பும் என்கிற பாணியில் இதன் கதை இருக்கிறதாம்.

ரொமான்சும் க்ரைமும் இணைந்த இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு விஜய் மில்டன். திரைக்கதை உருவாக்கும் பணிகளில் இப்போது பாலாஜி சக்திவேல் இருப்பதால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜனவரி கடைசியில் துவங்க உள்ளது.

பாலாஜி சக்திவேல் இயக்கிய ‘காதல்’ தவிர வேறு படங்கள் அவ்வளவாக போகவில்லை. ‘கல்லூரி’ சுமாராகப் ஓடியது. இந்நிலையில் இந்தப் படத்தை வெற்றிப்படமாகக் கொடுக்க வேண்டும் முயற்சி வீண் ஆகி விடக் கூடாது என்ற எண்ணத்துடன் ‘வழக்கு எண் 18/7’ படக்குழு படப்பிடிப்புக்குத் தயாராகி வருகிறது.

‘தீராத விளையாட்டுப் பிள்ளை’ ஆடியோ வெளியீட்டு விழா


எப்படியும் இந்தப் படத்தை ஹிட்டாகக் கொடுத்து விட வேண்டும் என்று இறங்கியிருக்கிறது ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’ டீம். விளையாட்டுப் பிள்ளை யாரு... நம்ம விஷால்தான்.

இந்தப் படத்தில் இவருக்கு ப்ளேபாய் மாதிரியான கேரக்டர். அப்புறம் கதை... புகுந்து வீடு கட்டுற மாதிரியான கதையாம். இதனால் நம்பிக்கையுடன் இருக்கிறார் விஷால்.

விஷால் படங்களின் ஆடியோ ரிலீஸ் என்றால் ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாக நடைபெறும், இன்னும் சொல்லப்போனால் சிம்பிளாக முடித்துவிடுவார்கள். ஆனால் ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’ ஆடியோவை பிரமாண்டமாக வெளியிடப் போகிறார்கள். இந்த வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தேவி திரையரங்கில் 16ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக இராமநாராயணன், உதயநிதி ஸ்டாலின், அபிராமி ராமநாதன், சிவசக்தி பாண்டியன், கலைப்புலி சேகரன், ஏவிஎம் சரவணன், இயக்குநர்கள் பாக்கியராஜ், அமீர், மிஸ்கின், பாலா, முருகதாஸ், கே.வி. ஆனந்த் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

இந்தப் படத்திற்கு இசை அமைத்திருக்கிறார் யுவன். பாடல்கள் கவிஞர் வாலி, பா.விஜய். அர்விந்த் கிருஷ்ணா இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.