Saturday, June 7, 2008

மதவாச்சி ஊடாக தமிழர்கள் செல்வதற்கு அனுமதி மறுப்பு

வவுனியா, மன்னார் மாவட்டங்களில் இருந்து தமிழ் மக்கள் மதவாச்சி ஊடாக சிறிலங்காவிற்குச் செல்வதற்கு சிறிலங்காப் படைத்தரப்பினால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை மாலை 5:00 மணியில் இருந்து இத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா, மன்னார் பிரதேசங்களில் இருந்து சிறிலங்காவின் தென்பகுதி நோக்கிச் செல்பவர்களின் பாதுகாப்பு கருதியே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சிறிலங்காப் படைத்தரப்பினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா, மன்னார் பிரதேசங்களில் இருந்து தெற்கு நோக்கி பேருந்துகளிலோ அல்லது தொடருந்திலோ தமிழ் மக்கள் செல்லமுடியாது எனவும், இது தற்காலிக நடவடிக்கையே என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலைமையை அடுத்து, வவுனியாவில் இருந்து மதவாச்சிக்கான போக்குவரத்துச் சேவைகள் நிறுத்தப்பட்டிருப்பதாக வவுனியா மக்கள் போக்குவரத்துச் சேவை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நன்றி: புதினம்

Friday, June 6, 2008

மொறட்டுவவில் பேருந்து மீது கிளைமோர்த் தாக்குதல்: 20 பேர் பலி- 75 பேர் காயம்

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் புறநகர்ப்பகுதியான மொறட்டுவவில் பயணிகள் பேருந்தினை இலக்கு வைத்து இன்று வெள்ளிக்கிழமை காலை 7:35 மணியளில் இடம்பெற்ற கிளைமோர்த் தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 75-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவத்தையடுத்து அப்பகுதியில் காவல்துறை ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு தமிழர்கள் கைது செய்யப்படுவதுடன், அங்கு தொடர்ந்தும் பதற்றம் நிலவுகின்றது.

கல்கிசையில் இருந்து கொட்டாவ நோக்கிச் சென்று கொண்டிருந்த 255 இலக்க வழிப்பாதையைக் கொண்ட பேருந்தினை இலக்குவைத்து, மொறட்டுவ பல்கலைக்கழகத்துக்கு அண்மையில் உள்ள சைல பிம்பாரமைய விகாரைக்கு முன்பாக இக்கிளைமோர்த் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

முன்னர் பேருந்திற்குள் இருந்த குண்டே வெடித்ததாக காவல்துறையினர் தெரிவித்திருந்தனர். ஆனால் பின்னர் தாக்குதல் இடம்பெற்ற வீதியில் உள்ள மரங்கள் நிறைந்த பகுதியில் மறைத்து வைக்கப்பட்டே இக்கிளைமோர் தொலைவில் இருந்து இயக்கப்படும் தன்னியக்க கருவியைப் பயன்படுத்தி வெடிக்க வைக்கப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.



இச்சம்பவத்தில் சம்பவ இடத்திலேயே 19 பேர் கொல்லப்பட்டனர். மேலும் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். கொல்லப்பட்டவர்களில் 12 ஆண்களும் 8 பெண்களும் அடங்குவர் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முன்னர் 21 பேர் உயிரிழந்தனர் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்த போதும் தற்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 என்றே மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

காயமடைந்தவர்கள் களுபோவில மற்றும் லுணாவ மருத்துவமனைகளில் முதலில் அனுமதிக்கப்பட்டனர். களுபோவில மருத்துவமனையில் 48 பேரும் லுணாவ மருத்துவமனையில் 13 பேரும் கொழும்பு தேசிய மருத்துவமனையில் ஒருவரும் முதலில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் லுணாவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 13 பேரும் களுபோவில மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் 12 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்று களுபோவில மருத்துவமனை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. அவர்களுக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆபத்தான கட்டத்தில் இருக்கும் சிலர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.

இக்கிளைமோர்த் தாக்குதலை அடுத்து கல்கிசைக்கும் கொட்டாவிற்கும் இடைப்பட்ட வீதிப் போக்குவரத்தினை படைத்தரப்பினர் மூடினர். இதனால் அப்பகுதியில் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டது.

இச்சம்பவத்தில் காயமடைந்த அனைவரும் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் உடனடியாக காவல்துறை ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இன்று காலை 9:00 மணிமுதல் மாலை 6:00 வரை இந்த ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மொறட்டுவ, கட்டுப்பெத்த, டென்டெனியாவத்த மற்றும் தெகிவளையின் சில பகுதிகளிலேயே இந்த ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதையடுத்து அப்பகுதிக்கு மேலதிக படையினரும் காவல்துறையினரும் குவிக்கப்பட்டு தமிழர்களின் வீடுகள், கடைகள் மற்றும் பொது இடங்களில் கடுமையான தேடுதல்கள் நடத்தப்படுவதுடன் தமிழர்கள் கைது செய்யப்பட்டும் வருகின்றனர்.

குறிப்பாக மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவர்களிடம் கடுமையான விசாரணைகள் நடைபெறுவதுடன் இதுவரை மாணவர்கள் இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவர்களிடம் தொடர்ந்தும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.



விசாரணைகளின் போது படையினரும் காவல்துறையினரும் கடுமையாக நடந்து கொள்வதாகத் தெரிவித்த அப்பகுதியில் உள்ள மக்கள், படையினர் பலரைத் தாக்கியுள்ளனர் என்றும் தெரிவித்தனர். ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் உள்ளதால் அப்பகுதிக்குள் நடப்பது குறித்த தகவல்கள் உடனடியாக வெளியே வரவில்லை.

கிளைமோர்த் தாக்குதல் இடம்பெற்ற இடத்தில் நேற்று இரவு நாய்கள் வழமைக்கு மாறாக குரைத்ததாகவும் இன்று காலை சில நாய்களுக்கு நஞ்சு ஊட்டப்பட்டிருந்தது என்றும் அப்பகுதியில் உள்ளவர்கள் தெரிவித்தனர். நஞ்சு ஊட்டப்பட்டதால் அப்பகுதியில் ஏழு நாய்கள் உயிரிழந்துள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை மேற்படி கிளைமோர்த் தாக்குதலையடுத்து நடத்தப்பட்ட தேடுதலில் தெகிவளையை அண்மித்த பகுதியில் வெடிக்கும் நிலையில் இருந்த சக்திவாய்ந்த கிளைமோர்க் குண்டு ஒன்றை குண்டு செயல் இழக்க வைக்கும் பிரிவினர் மீட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து அப்பகுதியிலும் தேடுதல் நடைபெற்று வருகின்றது. தேடுதலின் போது படையினர் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

படங்கள்: ஏ.எஃப்.பி, ரொய்ட்டர்ஸ்

நன்றி: புதினம்

Tuesday, June 3, 2008

மாங்குளத்தில் கிளேமார்த் தாக்குதல்: 2 சிறுவர்கள் உட்பட 6 பொதுமக்கள் படுகொலை

முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளத்தில் சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியினர் நடத்திய கிளைமோர்த் தாக்குதலில் 2 சிறுவர்கள் உட்பட 6 அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஒரு வயதுக் குழந்தையும் 2 சிறுவர்களும் உட்பட 4 பேர் காயமடைந்துள்ளனர்.

முல்லைத்தீவில் இருந்து புதூர் நாகதம்பிரான் கோவில் விழாவுக்கு "8 சிறீ 6109" என்ற இலக்கம் கொண்ட பழைய மொறிஸ் மைனர் காரில் சென்று கொண்டிருந்த மக்கள் மீது நேற்று திங்கட்கிழமை இரவு 8:40 மணியளவில் இக்கிளைமோர்த் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இச்சம்பவம் மாங்குளத்திற்கும் கரிப்பட்டமுறிப்பிற்கும் இடைப்பட்ட 19 ஆம் கட்டைப்பகுதியில் நடைபெற்றது.

இதில் 2 சிறுவர்கள் உட்பட 6 பொதுமக்கள் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர்.

படுகாயமடைந்த நிலையில் 4 பேர் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் நடைபெற்று நீண்ட நேரத்திற்குப் பின்னர்தான் அப்பகுதிக்கு உதவி சென்று சேர்ந்துள்ளது.

கொல்லப்பட்டோர் விபரம்:

முல்லைத்தீவு அம்பலவன்பொக்கணை முள்ளிவாய்க்கால் பகுதிகளைச் சேர்ந்த

பசுபதிப்பிள்ளை முருகதாஸ் (வயது 33)

முருகதாசின் மகன் தனுஜன் (வயது 04)

ஐயாத்துரை வசந்தகுமார் (வயது 30)

தர்மலிங்கம் யோகேஸ்வரி (வயது 35)

கணேசலிங்கம் கனிஸ்ரா (வயது 08)

காத்தமுத்து நாகராசா (வயது 53)

காயமடைந்தோர் விபரம்:

கொல்லப்பட்ட முருகதாசின் மகன் ஜெனடி (வயது 10)

முருகதாசின் மனைவி சித்திரா (வயது 26)

வசந்தகுமார் சுஜிந்தன் (ஒன்றரை வயது)

தர்மலிங்கம் ஜினோஜினி (வயது 16)

இவர்களில் ஜினோஜினி படுகாயமடைந்த நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ளார்.

சிறிலங்காப் படையினரால் பாதிக்கப்பட்டு பின்பு ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்டு முல்லைத்தீவு கரையோரப்பகுதியில் வசிக்கும் மக்களே காரில் புதூர் நாதம்பிரான் கோவில் திருவிழாவிற்கு சென்று திருப்பிக்கொண்டிருக்கையில் இந்த அவலச்சம்பவம் இடம்பெற்றது.

நன்றி: புதினம்

ஏறாவூரில் துணைப் படைக்குழுவின் பிரதேச சபை உறுப்பினர்கள் இருவர் சுட்டுக்கொலை

மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூரில் இன்று சிறிலங்காப் படையினருடன் சேர்ந்தியங்கும் துணைப் படைக்குழுவைச் சேர்ந்த களுவாஞ்சிக்குடி எருவில்பற்று பிரதேச சபை உப தலைவர் உட்பட பிரதேச சபை உறுப்பினர்கள் இருவர் அடையாளம் தெரியாத நபர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

முச்சக்கர வாகனத்தில் வந்த இருவரே இவர்கள் இருவரையும் இன்று திங்கட்கிழமை பிற்பகல் 2:30 மணியளவில் சுட்டுக்கொன்றிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

எருவில்பற்றைச் சேர்ந்த ஐயாத்துரை புஸ்பநாதன், அற்புதராஜன் ஆகியோரே சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் ஆவர்.

வீதியில் சென்ற இவர்கள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டபோது உயிரிழந்துள்ளனர் என்று கூறப்படுகின்றது.

இச்சம்பவத்தையடுத்து அப்பகுதியில் பதற்றம் நிலவுகின்றது.

ஏற்கனவே துணைப் படைக்குழுவான பிள்ளையான் குழுவுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை இருந்து வந்த நிலையில் பிள்ளையான் குழுவைச் சேர்ந்த பிரதேச சபை உறுப்பினர்கள் இருவர் முஸ்லிம்கள் செறிந்து வாழும் ஏறாவூரில் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை காத்தான்குடியில் இடம்பெற்ற வன்முறைகள் மற்றும் அங்கு நிலவும் பதற்றம் குறித்து துணைப்படைக்குழுவின் தலைவரான பிள்ளையானும், மாகாண சபை அமைச்சரான ஹிஸ்புல்லாவும் இன்றைய நாள் பேச்சுவார்த்தை நடத்தியிருந்த நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: புதினம்

குடாநாட்டு கரையோரங்களில் திடீர் ஊரடங்குச் சட்டம்

யாழ்ப்பாணம் குருநகரில் இன்று முற்பகல் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதனைத் தொடர்ந்து கொழும்புத்துறை முதல் பாசையூர் வரையான கரையோரப் பகுதிகளில் திடீர் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

குருநகரைச் சேர்ந்த பற்றிக் வின்சன் (வயது 23) என்ற இளைஞனே சுட்டுக்கொல்லப்பட்டவர் ஆவார்.

குருநகர் பற்றிக்ஸ் கல்லூரி வீதியில் ஈருளியில் சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத இருவர் இவரை சுட்டுக்கொன்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவத்தையடுத்து அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நீதிபதி சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தை மருத்துமனையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.

சம்பவத்தையடுத்து இன்று பிற்பகல் 3:00 மணியளவில் தமது வாகனங்களில் ஒலிபெருக்கிகளை கட்டிக்கொண்டு கரையோரப் பகுதிகளுக்கு சென்ற படையினர் இன்று மாலை 5 மணிமுதல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுவதாகத் அறிவித்துள்ளனர்.

கொழும்புத்துறை, குருநகர், பாசையூர், மணியம் தோட்டம், கொய்யாத்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் ஊரடங்குச் சட்ட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவித்தலால் யாழ். நகரப்பகுதி நேற்று பிற்பகலுடன் வெறிச்சோடியது. கரையோரப் பகுதி மக்களிடையே பதற்றமான நிலை நிலவுவதாக யாழ்ப்பாணத்தில் உள்ள செய்தியாளர் ஒருவர் தெரிவித்தார்.

ஊரடங்குச் சட்டம் அறிவித்தலையடுத்து கரையோரப் பகுதிகளில் பெருமளவான படையினர் குவிக்கப்பட்டு வருகின்றனர்.

நன்றி: புதினம்

காத்தான்குடி பதற்றத்தால் மக்கள் மீண்டும் இடம்பெயர்வு

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள காத்தான்குடியில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையையடுத்து காத்தான்குடி மற்றும் ஏறாவூர் எல்லைக்கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இன்றைய நாள் மீண்டும் இடம்பெயர்ந்து வருகின்றனர்.

இப்பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வன்முறைகள் இடம்பெற்றன. இதனால் அச்சமுற்ற இப்பகுதியில் உள்ள எல்லைப்பகுதி மக்கள் இடம்பெயர்ந்திருந்தனர்.

எனினும் கடந்த வியாழக்கிழமை இவர்கள் மீண்டும் தமது சொந்த இடங்களுக்கு திரும்பியிருந்தனர்.

இந்நிலையிலேயே நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை கல்லடியில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் வெட்டிக்கொல்லப்பட்டார். இதனையடுத்து மீண்டும் இப்பகுதிகளில் பதற்றம் நிலவுவதால் எல்லைக்கிராம மக்கள் மீண்டும் இடம்பெயர்ந்து வருகின்றனர்.

மக்கள் இடம்பெயர்வதனையடுத்து அப்பகுதிகளில் படையினர் குவிக்கப்பட்டு வருகின்றனர்.

இதேவேளை கல்லடியில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் வெட்டிக்கொல்லப்பட்டதனைக் கண்டித்து காத்தான்குடியில் இன்று முழுநாள் கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கடையடைப்பை முன்னிட்டு வர்த்தக நிலையங்கள் மற்றும் சந்தை மூடப்பட்டுள்ளன. பாடசாலைகள் மற்றும் அலுவலகங்களும் இயங்கவில்லை. போக்குவரத்து சிறியளவிலேயே இடம்பெற்றது.

நன்றி: புதினம்

யாழில் படையினரின் கைக்குண்டு வெடித்து சிறுவன் பலி- 2 சிறுவர்கள் படுகாயம்

யாழ். மாவட்டம் வலிகாமம் வடக்கில் உள்ள ஏழாலையில் உயர்பாதுகாப்பு வலயத்தில் படையினர் கைவிட்டுச் சென்ற கைக்குண்டை எடுத்து விளையாடியதால் அது வெடித்துச் சிதறி சிறுவன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்ததுடன் மேலும் இரண்டு சிறுவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

ஏழாலையில் உள்ள படையினரின் உயர்பாதுகாப்பு வலயப் பகுதியிலேயே இச்சம்பவம் நேற்று மாலை 6:30 மணியளவில் இடம்பெற்றது.

மேற்படி உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ள வீதியில் ஆட்களற்ற வீடொன்றின் முன்பாக படையினர் பகல் நேரங்களில் காவலுக்கு நிற்பது வழமை.

சம்பவ நாளன்று மேற்படி வீட்டுக்குள் விளையாடுவதற்காக நுழைந்த சிறுவர்கள் அங்கு கைவிடப்பட்ட நிலையில் இருந்த கைக்குண்டை தூக்கி விளையாடிய போது அது திடீரென வெடித்துச் சிதறியது.

இதில் சம்பவ இடத்திலேயே சிறுவன் ஒருவன் உயிரிழந்தான். மேலும் இரண்டு சிறுவர்கள் படுகாயமடைந்து யாழ். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஏழாலை வடக்கைச் சேர்ந்த ஜெயராசா தர்சன் (வயது 9) என்ற சிறுவனே இச்சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளார். அதே இடத்தைச் சேர்ந்த ஜெயராசா விதுசன் (வயது 05), பிரபானந்தன் யதுசன் (வயது 06) ஆகியோரே படுகாயமடைந்தவர்கள் ஆவர்.

படையினரின் கவனயீனமே இச்சம்பவத்திற்கு காரணம் என்று சம்பவ இடத்திற்குச் சென்ற மல்லாகம் நீதிபதியிடம் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் பெற்றோர் கூறியுள்ளனர்.

நன்றி: புதினம்

கந்தானவில் இரண்டு இளைஞர்களின் சடலங்கள் மீட்பு

சிறிலங்காவின் கம்பஹா மாவட்டம் கந்தானவில் இரண்டு இளைஞர்களின் சடலங்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இதுவரை அடையாளம் காணப்படாத இந்த சடலங்கள் இரண்டும் சுமார் 20 வயது முதல் 25 வயதுடைய இளைஞர்களுடையது என்று கந்தான காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சடலங்கள் இரண்டிலும் துப்பாக்கிச் சூட்டுக்காயங்கள் காணப்படுகின்றன.

நான்கு நாட்களுக்கு முன்னர் இவர்கள் இருவரும் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்தே கந்தான சதுப்பு நிலப்பகுதியில் இருந்து இந்த சடலங்களை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

இச்சடலங்கள் குறித்த விசாரணைகளை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் மீண்டும் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் கொழும்பை அண்மித்துள்ள கந்தானவில் இச்சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதால் கடத்தப்பட்டு காணாமல் போனவர்களுடையதாக சடலங்களாக இருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.

இதற்கு முன்னர் வத்தளை பமுனுகம பகுதியில் உள்ள சதுப்பு நிலங்களிலிருந்தும் அடையாளம் தெரியாத சடலங்கள் துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நன்றி: புதினம்

காத்தான்குடியில் மீண்டும் பதற்றம்: ஒருவர் சுட்டுக்கொலை- 4 பேருக்கு வாள்வெட்டு

மட்டக்களப்பு கல்லடியில் நேற்று பிற்பகல் முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக்கொல்லப்பட்டதையடுத்து காத்தான்குடி ஊடாகப் பயணித்த நான்கு தமிழர்கள் நேற்று மாலை வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவங்களால் முஸ்லிம்கள் செறிந்து வாழும் காத்தான்குடியிலும், ஆரயைம்பதியிலும் மீண்டும் பதற்றகரமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

கல்லடி மயானத்தை அண்மித்துள்ள வீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:30 மணியளவில் அப்துல் பாருக் குத்தூஸ் (வயது 48) என்பவர் அடையாளம் தெரியாதவர்களால் வெட்டிக்கொல்லப்பட்டார்.

மரக்கறி வியாபாரியான இவர் காத்தான்குடியைச் சேர்ந்தவர் என்றும் இவர் என்ன காரணத்திற்காக படுகொலை செய்யப்பட்டார் என்பது தெரியவரவில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தையடுத்து காத்தான்குடி முஸ்லிம்கள் மத்தியில் ஒருவித பதற்றமான நிலை காணப்பட்டது.

வியாபார நிலையங்கள் மூடப்பட்டு போக்குவரத்துக்கள் நிறுத்தப்பட்டன.

இச்சம்பவம் குறித்து உடனடியாக காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து காவல்துறையினரும் அதிரடிப்படையினரும் காத்தான்குடியில் குவிந்து வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.

இந்நிலையிலேயே நேற்று மாலை 5:30 மணியளவில் காத்தான்குடி எல்லைக்கிராமம் ஒன்றின் ஊடாகப் பயணித்த நான்கு தமிழர்கள் கடுமையான வாள் வெட்டுக்கு இலக்காகினர்.

வாள்வெட்டுக்கு இலக்காகிய அனைவரும் தமிழர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.

கட்டட நிர்மாண வேலைக்குச் சென்றுவிட்டு இவர்கள் வீடு திரும்பிக்கொண்டிருந்த போதே தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர் என்று கூறப்படுகின்றது.

கிரான்குளத்தைச் சேர்ந்த ரவீந்திரன் (வயது 30), மாவிலங்குதுறையைச் சேர்ந்தவர்களான பதீஸ்வரன் (வயது 17), இராசதுரை (வயது 42), தாளங்குடாவைச் சேர்ந்த சிவானந்தம் (வயது 49) ஆகியோரே வாள்வெட்டுக்கு இலக்கானவர்கள் ஆவர்.

இச்சம்பவங்களையடுத்து முஸ்லிம்கள் செறிந்து வாழும் காத்தான்குடியிலும் தமிழ்மக்கள் செறிந்து வாழும் பகுதிகளிலும் பதற்றகரமான சூழ்நிலை நிலவுகின்றது.

இன்று காலை காத்தான்குடி ஊடாக போக்குவரத்துக்கள் இடம்பெற்று வருகின்ற போதும் அவை அதிரடிப்படையினரதும் காவல்துறையினரதும் கடுமையான பாதுகாப்புக்கு மத்தியிலேயே இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நன்றி: புதினம்

புத்தளத்தில் மதபோதகர் உட்பட நால்வர் கடத்தல்

சிறிலங்காவின் புத்தளம் மாவட்டத்தில் நேற்று முன்நாள் வெள்ளை வான் ஆயுததாரிகளால் மதபோதகர் ஒருவர் உட்பட நால்வர் கடத்தப்பட்டுள்ளனர்.

புத்தளம் கருவலகஸ்வெவ என்ற இடத்தில் உள்ள தேவாலயத்தில் இருந்த மதபோதகரான கந்தையா சிவகுமாரனும் அவரது உதவியாளரான மாரியப்பன் குவனேஸ்வரனும் வெள்ளை வானில் வந்தவர்களால் நேற்று முன்நாள் சனிக்கிழமை இரவு 7:00 மணியளவில் ஆயுதமுனையில் கடத்தப்பட்டுள்ளனர்.

இவர்கள் என்ன காரணத்திற்காக கடத்தப்பட்டுள்ளனர் என்பது தெரியவரவில்லை என்று தெரிவித்துள்ள காவல்துறையினர், இது தொடர்பான விசாரணைகள் இடம்பெறுவதாகவும் தெரிவித்தனர்.

இதேவேளை புத்தளம் 4 ஆவது மைல்கல் பகுதியில் நேற்று முன்நாள் பிற்பகல் 2:30 மணியளவில் இருவர் கடத்தப்பட்டுள்ளனர்.

முச்சக்கர வாகனச் சாரதியான இராமலிங்கம் சுதாகரன், தொழில்நுட்பவியலாளரான தே.நிசாந்தன் ஆகியோரே கடத்தப்பட்டுள்ளனர் என்று காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நன்றி: புதினம்

Sunday, June 1, 2008

2 killed, 8 injured in Wellawatte blast

TamilNet: "Two have been killed and more than 8 injured due to a grenade blast near a bus stop in Rajasinghe Mawatte on Galle Road close to Richard Peries supermarket at 9:00 p.m. Saturday night, according to Wellawatte police."

விஸ்வரூபம் எடுக்கும் சீனா

..:: Uthayan 1:: A Tamil Newspaper from Jaffna - Srilanka ::..: "ஸியோனிச சக்திகளுடன் கைகோர்த்த வரலாற்றுத் தவறை இழைத்ததன் காரணமாக உலகளாவிய ரீதியில் இஸ்லாமிய அடிப்படை வாதிகளின் கடும் எதிர்ப்பைச் சம்பாதித்து நிற்கின்றது அமெரிக்க வல்லாதிக்கம்.
இந்தப் பகையுறவை எதிர்கொள்வதற்காக 'பயங்கரவாதத் �"

வெள்ளவத்தையில் கைக்குண்டுத் தாக்குதல்: 2 பொதுமக்கள் பலி- 8 பேர் காயம்- கிராண்ட்பாசில் மின்மாற்றி தகர்ப்பு

சிறிலங்கா தலைநகர் கொழும்பு வெள்ளவத்தையில் நேற்று இரவு இடம்பெற்ற கைக்குண்டுத் தாக்குதலில் 2 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 8 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக களுபோவில மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

காலி வீதி வெள்ளவத்தையில் உள்ள ஹோட்டல் றொலக்சிக்கும் ஹோட்டல் ஒமோகா இன்னிற்கும் இடையில் உள்ள பேருந்து தரிப்பிடத்திற்கு அண்மையில் உள்ள மருந்தகத்திற்கு முன்பாக இக் கைக்குண்டுத் தாக்குதல் நேற்று சனிக்கிழமை இரவு 8:50 மணியளவில் இடம்பெற்றது.

உந்துருளியில் வந்த இருவரே இக் கைக்குண்டை வீசிவிட்டுச் சென்றனர் என்று சம்பவத்தை நேரில் பார்த்தவரும், காயமடைந்தவருமான ஒருவர் தெரிவித்தார்.

இவரது நண்பர் இத்தாக்குதலில் தலையின் பின்புறத்தில் காயமடைந்த நிலையில் களுபோவில மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படும் போது வழியில் உயிரிழந்துள்ளார்.

ஹோட்டல் றொலக்சில் இரவு உணவுப் பொதியை எடுத்துக்கொண்டு வீடு செல்வதற்காக பேருந்து நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தபோதே எமக்கு அருகில் குண்டு வெடித்தது என்று சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் தெரிவித்தார்.

இக் கைக்குண்டுத் தாக்குதலில் 10 பேர் சம்பவ இடத்தில் காயமடைந்து களுபோவில மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். அவர்களில் இருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் போது உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவர் யாழ்ப்பாணம் சுண்டுக்குழியைச் சேர்ந்த வை.கீதன் என்று தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்த மற்றவரின் பெயர் விபரம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

கிராண்ட்பாசிலும் குண்டுத்தாக்குதல்

வெள்ளவத்தை கைக்குண்டு தாக்குதல் இடம்பெற்ற சில விநாடிகளில் கிராண்ட்பாஸ் வீதியில் மின்மாற்றி கபினட் ஒன்று பாரிய சத்தத்துடன் வெடித்துச் சிதறியுள்ளது.

குண்டுத்தாக்குதல் மூலமே இந்த மின்மாற்றி வெடித்துச் சிதறியிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் எவரும் பாதிக்கப்படாத போதும் சம்பவ இடத்தில் பதற்றம் நிலவியது.

ஆமர் வீதியில் இருந்து கொஸ்கஸ் சந்திப் பகுதிக்குச் செல்லும் கிராண்ட்பாஸ் வீதியிலேயே இந்த மின்னமாற்றி அமைந்திருந்தது.

சம்பவத்தை அடுத்து இந்த வீதி படையினரால் போக்குவரத்திற்கு தடைசெய்யப்பட்டது.

சம்பவம் குறித்து விசாரணைகளை நடத்துவதாக கிராண்ட்பாஸ் காவல்துறையினர் தெரிவித்தனர்.

கொழும்பில் தமிழ்மக்கள் செறிந்து வாழும் வெள்ளவத்தையிலும் கிராண்ட்பாசிலும் நேற்று இரவு இடம்பெற்ற இக் குண்டுத்தாக்குதல்களால் பதற்றமான நிலை நிலவியது.

இதேவேளை இக் குண்டுத்தாக்கதல்களையடுத்து கொழும்பு நகருக்குள் நுழையும் பிரதான வீதிகளில் சோதனைகளை அதிகப்படுத்தியிருந்த படையினர், பயணிகளின் வாகனங்களை கடுமையான சோதனைகளை நடத்தியதால் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டது.

களனி பாலத்தில் நடைபெற்ற சோதனைகளால் பல மணிநேரமாக வாகனங்கள் தரித்து நின்றதைக் காணக்கூடியதாக இருந்தது.


நன்றி: புதினம்