Saturday, May 31, 2008

58 ஆம் ஆண்டு இனப்படுகொலை ஒரு தற்செயல் நிகழ்வல்ல- வரலாற்றின் முரண்பாடே: பா.நடேசன் விளக்கம்

1958 ஆம் ஆண்டு இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை என்பது ஒரு தற்செயல் நிகழ்வல்ல- இலங்கைத் தீவின் வரலாறுகளில் தொடரும் முரண்பாடு என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் விளக்கம் அளித்துள்ளார்.

"58 இனவெறிக்கு அகவை 50" நிகழ்வில் அவர் ஆற்றிய சிறப்பு உரை

தமிழ் மக்களின் வரலாற்றில் மறக்க முடியாத சம்பவமாக இந்த விடுதலைப் போராட்டத்திற்கு முக்கிய காரணியாக இருக்கின்ற- இருந்து வருகின்ற 1958 ஆம் ஆண்டு இனவெறித் தாக்குதல்கள் தொடர்பான இந்த அரங்க நிகழ்வுகள் உண்மையாக எல்லோரது மனங்களிலும் தாக்கங்களை ஏற்படுத்தியிருந்தது.

எல்லோரினது உள்ளங்களிலும் இன உணர்வு தூண்டப்பெற்று விடுதலைக்கு எவ்வாறு பங்களிக்கலாம் என்ற விடுதலை உணர்வில் உந்தப்படுகின்ற சூழலை உருவாக்குகின்ற நிகழ்வாக இது இருந்தது எனலாம்.

1958 ஆம் ஆண்டு இனவெறித்தாக்குதலானது தற்செயலாக நிகழ்ந்த சம்பவம் இல்லை.

இலங்கைத்தீவின் வரலாற்றில்

எந்த தொல்லியல் ஆய்வாளர்கள் என்றாலும் சரி,

மானிடவியல் ஆய்வாளர்கள் என்றாலும் சரி,

வரலாற்றியல் ஆய்வாளர்கள் என்றாலும் சரி,

அல்லது சமூகவியல் ஆய்வாளர்கள் என்றாலும் சரி

அனைவரும் ஏற்றுக்கொள்கின்ற ஒரு முக்கியமான விடயம் இலங்கைத்தீவில் இரண்டு தேசிய இனங்கள், வரலாற்று ரீதியாக இருந்து வருகின்றன என்பதுவே.

அந்த இரண்டு தேசிய இனங்களுக்கு இடையில் வரலாற்று ரீதியாக

ஒவ்வொரு தேசிய இனமும்

வெவ்வேறு மொழிகள்,

வெவ்வேறு பண்பாடுகள்,

வெவ்வேறு பொருளாதார வாழ்க்கை முறைகள்

வெவ்வேறு சமூகக் கட்டமைப்புக்களைக்கொண்ட

வெவ்வேறு தேசிய இனங்கள் என்பதை இன்று அனைவருமே உலகளாவிய ரீதியாக ஏற்றுக்கொள்கின்றனர்.

இந்த இரண்டு தேசிய இனங்களுக்கும் வரலாற்று ரீதியாக பல முரண்பாடுகள் காலத்திற்குக் காலம் தோன்றுவது உண்டு.

அதன் தொடர்ச்சியாகத் தான் 1958 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் மீது சிங்களப் பேரினவாதம் கட்டவிழ்த்து விட்ட இனவெறித்தாக்குதல் நடவடிக்கையாகும்.

இந்த இனவெறித் தாக்குதல் என்பது சிங்களப் பேரினவாதத்தின் தற்செயலாக, உணர்ச்சிகளாக உந்தப்பட்டு அல்லது ஏதாவதொரு காரணிகளுக்காக ஏற்பட்ட விடயமல்ல.

வரலாற்று ரீதியாக சிங்கள ஆட்சியாளர்கள் சிங்களப் பேரினவாதிகள்

திட்டமிட்ட ஒரு கொள்கை வகுப்பின் அடிப்படையில்

திட்டமிட்டு செயற்படுத்திய ஒரு நிகழ்வாகும்.

இந்த இலங்கைத்தீவை முற்று முழுதாக சிங்களப் பேரினவாத அல்லது சிங்கள நாடாக மாற்றி அமைப்பதற்காக, எண்ணிக்கையில் குறைந்த தமிழ்த்தேசிய இனத்தை அழிப்பதற்காக- மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைதான் 1958 ஆம் ஆண்டு இனப்படுகொலை.

வரலாற்று ரீதியாக ஒரு தேசிய இனத்திற்கு அதன் விழுமியங்கள் முக்கியமானவை.

அந்த விழுமியங்களில் மொழி என்பது மிக மிக முக்கியம்.

மொழி, நிலம், பண்பாடு, அவர்களின் வாழ்க்கை முறை எனப்படும் அந்த தேசிய இனத்திற்கான அடையாளங்களில் முக்கியமானது மொழி.

நாம் தமிழ் மொழியைப் பேசுகின்றபடியால் தான் தமிழர்கள்- ஆங்கிலத்தைப் பேசுகின்றவர்கள் ஆங்கிலேயர்கள்- பிரான்சிய மொழியைப் பேசுகின்றவர்கள் பிரான்சியர்கள்.

எந்த எந்த மொழியை எந்த மக்கள் பேசுகின்றார்களோ அவர்கள் அந்த இனத்தைச் சார்ந்தவர்களாக இருப்பார்கள். அந்த மொழியோடு சேர்ந்த பண்பாடு மற்றும் வாழ்க்கை முறை என்று தொடர்ந்து கொண்டே போகும்.

அந்த வகையில் இலங்கைத் தீவில் வரலாற்று ரீதியாக தமிழ்த் தேசிய இனத்தவர் வாழ்ந்து வருகின்ற பிரதேசங்களில் அவர்களை அழிப்பதோடு மட்டுமல்லாது அவர்களின் மொழியை அழிப்பதன் ஊடாக சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்கள் தமிழ் இன அழிப்பை மேற்கொள்ளலாம் என்ற நீண்டகால கொள்கை வகுப்பின் ஓர் பகுதியாகத்தான் 1956 ஆம் ஆண்டு அரச கரும மொழியாக தனிச்சிங்கள சட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்றினார்கள்.

சிங்கள மொழியினை அரச மொழியாக கொண்டு வந்தது அரச அலுவலகங்களில் வேலை பார்ப்பதற்கு மட்டும் அன்று.

தனிச் சிங்களச் சட்டம் அதாவது சிங்களம் மட்டுமே இலங்கையின் அரச கரும மொழி என்று கொண்டு வந்தமையானது உன்மையில் தமிழ் மக்களை மொழியியல் ரீதியாக படிப்படியாக மாற்றுவது.

மேலும் தமிழ்ப் பிரதேசங்களில் அந்த மொழியைப் புகுத்தி அதன் ஊடாக அங்கே உள்ளவர்கள் சிங்களத்தில் எல்லாவற்றையும் தொடங்கும் பொழுது இயல்பாகவே அந்த இனம் படிப்படிப்படியாக சிங்கள மயப்படுத்தப்படும்.

வரலாற்றில் பல நாடுகளில் இப்படியான எடுத்துக்காட்டுக்களை நாம் சொல்லலாம்.

தமிழர் தாயக பூர்வீக பூமியாக இருந்த நீர்கொழும்பு, புத்தளம், சிலாபம் போன்ற பல பிரதேசங்கள் இன்று சிங்களப் பிரதேசமாக மாற்றப்பட்டு தமிழர்களாக வாழ்ந்த எம் மக்கள் சிங்களவர்களாக மாற்றப்பட்டுள்ளனர்.

தமிழ் மக்களை எவ்வாறு சிங்களவர்களாக்கலாம் என்பது நன்றாக சிங்களப் பேரினவாதத்திற்குத் தெரியும்.

இது பண்டாரநாயக்காவிற்கும் நன்றாகத் தெரியும். ஜே.ஆர்.ஜெயவர்த்தனவிற்கும் தெரியும். அவர்கள் இதனை நன்றாக தெரிந்து கொண்டுதான் 1956 ஆம் ஆண்டு சிங்களம் மட்டும் அரச கரும மொழியாக்கினர்.

தமிழர்களை அரச தொழில்களுக்கு விருப்பம் கொள்ளச் செய்கின்ற ஒரு முறைதான் அந்தப்பிரதேசத்தில் கல்வி ஊடாக இருந்து வருகின்றது.

அதன் ஊடாக அங்குள்ள மக்கள் அரச உத்தியோகத்தர்களாகப் போகின்ற போது இயல்பாகவே சிங்களம் படிப்பது மட்டுமல்ல தமிழர்கள் தங்களின் பிள்ளைகளையும் அரச தொழில்களுக்கு சேர்ப்பதற்காக பிள்ளைகளுக்குக் கூட சிங்களம் கற்பிக்க தூண்டலாம் என்ற மிகவும் சூழ்ச்சிகரமான நீண்ட காலத்திட்டம்தான் அடிப்படையிலேயே 1956 ஆம் ஆண்டு தனிச்சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்டது.

அதனை ஒரு தற்செயலான நிகழ்வாகப் பார்க்கக்கூடாது. வரலாறு எமக்கு நிறையப் பாடங்களைக் கற்றுத் தந்திருக்கிறது. எமது இனத்தின் முக்கிய அடையாளமான மொழி மீது கை வைத்ததனை எதிர்த்து அன்றைய தமிழ்த் தலைவர்கள் அதற்கு எதிரான போராட்டங்களை அகிம்சை முறையில் தொடங்கிய போதுதான் எமது மக்கள் மீது இந்தப் படுகொலைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.

அன்றைய அரசியல் தலைவர்கள் மீதும் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டன.

1958 ஆம் ஆண்டு படுகொலை என்பது அதாவது ஐரோப்பியர்கள் இங்கிருந்து சென்ற பின்னர் முதன் முதலாக சிங்களப் பேரினவாதம் தமிழ் மக்கள் மீது நன்கு திட்டமிடப்பட்டு, ஒழுங்கமைக்கப்பட்ட நிறுவனமயப்படுத்தப்பட்ட ரீதியில், சிங்கள அரச படைகளின் உதவியுடன் சிங்களக்குண்டர்களால் எமது மக்கள் மீது படுகொலைகளும் காடைத்தனங்களும் கட்டவிழ்த்து விடப்பட்டன.

1958 ஆம் ஆண்டு இனப்படுகொலையில் பாதிக்கப்பட்ட ஒரு தமிழ்த் தாயின் கதையை எமது தேசியத் தலைவர் கேட்டு எவ்வாறு விடுதலை உணர்வைப் பெற்றார்கள் என்பதனை இங்கு நடந்த அரங்க நிகழ்வில் அதனை சுட்டிக்காட்டினார்கள்.

1958 ஆம் ஆண்டு இனப்படுகொலை என்பது தமிழ் மக்களின் வரலாற்றில் ஒருவாராலும் மறக்கமுடியாது.

ஏனெனில் அரச பயங்கரவாதம் அதாவது சிங்கள அரச பயங்கரவாதம் முதலாவதாக தலைநகரில் இருந்து தமிழ் மக்கள் செறிவாக வாழ்கின்ற சிங்களப் பிரதேசங்களில் எல்லாம் வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டது மட்டுமல்ல அவர்களுக்கு போதுமான அளவு பாதுகாப்புக்கூட கொடுக்கப்படவில்லை.

தமிழ் மக்கள் கொழும்பில் இருந்து அடித்து விரட்டப்பட்ட போது அனைவரும் ஒரு சரஸ்வதி மண்டபத்திற்கு ஓடிச்சென்றனர். அங்கும் பாதுகாப்பு இல்லை என்று றோயல் கல்லூரிக்குச் சென்றனர். அங்கே உள்ள படித்த தமிழர்கள் என்று சொல்லப்படுபவர்கள் அன்றைய மகா தேசாதிபதியை சந்தித்த போது இங்கு பாதுகாப்பில்லை நீங்கள் கப்பலால் செல்லுங்கள் என்று அவர் தெரிவித்தார்.

அப்படியாக அந்த சிங்கள அரசு தனது படைகளை வைத்துக்கொண்டு தமிழ் மக்களை அவர்களின் தாயகப் பிரதேசத்திற்கு கப்பலில் அனுப்பினர்.

அகதிகளாக எமது மக்கள் வந்தனர். அவர்கள் இன்றும் எமது பிரதேசங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இது ஒரு முறையல்ல பல முறை நிகழ்ந்திருக்கிறது.

1958 ஆம் ஆண்டில் மட்டுமல்ல 1981 இலும் 1983 இலும் இனப் படுகொலைகள் மேற்கொள்ளப்பட்டன.

மலையக மக்களைக் கூட சிங்களவர்கள் அடித்துக் கலைத்தார்கள். மலையகத் தமிழ்மக்கள் தமது இரத்தத்தை வியர்வையாகச் சிந்தி மலையகத்தில் உழைத்திருக்கும் வரலாறு இருக்கின்றது.

இலங்கையின் பொருளாதாரத்தின் முதுகு எலும்பாக இருப்பவர்கள் தமிழர்கள். அவர்கள் அங்கே அடித்து விரட்டப்பட்டார்கள்.

இத்தகைய செயற்பாடுகளை- படுகொலைகளை நாம் தொடர்ந்து இடம்பெற அனுமதிக்கமுடியாது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

1983 படுகொலை நிகழ்வில் பாதிக்கப்பட்டோர் அதிகம் உள்ளனர்.

அப்போது சிங்கள அரச படைகள் அனைத்துமாக சிங்கள இராணுவம், சிங்களக் கடற்படை, வான்படை, சிங்களக் காவல்துறை ஆகியன திட்டமிட்டு தமிழர்களின் உயிர்களைப் பலியெடுத்தது. தமிழர்களது உடமைகள் சூறையாடப்பட்டன.

சிங்கள அரச படைகள் கொழும்பிலும் மற்றும் தமிழர் வாழிடம் அனைத்துக்கும் சென்று நேரடியாகக் குண்டர்களுடன் சேர்ந்து தமிழர்களின் வீடுகளை அழித்தது மட்டுமல்ல இலங்கையின் பொருளாதாரத்தில் பாரிய பங்கு வகித்த தமிழர்களின் தொழிற்சாலைகள் எல்லாம் எரிக்கப்பட்டன.

அன்றைய அரச தலைவராக இருந்த ஜே.ஆர் ஜெயவர்த்தன கூறினார்- "போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம்" என்று.

ஓர் நாட்டின் அரச தலைவர் அந்த நாட்டில் இருக்கின்ற மற்றொரு தேசிய இனத்திற்கு எதிராக இப்படியான வசனத்தை வானொலி ஊடாகக் கூறினார். இது எதனை எடுத்துக்காட்டுகின்றது என்றால் ஒரு நாடு மற்றொரு நாட்டின் மீது படையெடுக்கின்ற போதும் அதை ஆக்கிரமிக்கின்ற போதும் அந்நாட்டிற்கு எதிராக விடுக்கின்ற அறைகூவல் போன்றதே.

சிங்களவர்களின் அடிமன உள்ளக்கிடங்கில் இருந்தது வெளிவந்தது என்னவென்றால் தமிழ்த் தேசிய இனம் வேறு - சிங்களத் தேசிய இனம் வேறு என்பதுதான்.

தமிழீழம் வேறு

சிங்கள நாடு வேறு

என்பது தான்.

இனப் படுகொலையின் ஊடாக எமது மக்களை அழிப்பதுடன் நின்றுவிடாது எமது நிலத்தை ஆக்கிரமிக்கவும் விரும்புகின்றார்கள்.

தமிழ் மக்களை அழிப்பதற்காக சிங்களப் பேரினவாதம் ஒரு நீண்ட காலத்திட்டத்தினை வைத்துக்கொண்டிருக்கிறது.

அவர்கள் இனவெறித்தாக்குதல்களை காலத்திற்கு காலம் கட்டவிழ்த்து விடுவது மட்டுமல்ல எமது பிரதேசங்களை ஆக்கிரமிப்பதற்குக்கூட அவர்களின் திட்டங்கள் முக்கிய பங்கை வகிக்கின்றன.

ஒரு பக்கம் இனப்படுகொலை நடந்து கொண்டிருக்க இன்னொரு பக்கத்தில் தென் தமிழீழத்தில் துண்டு துண்டாக எமது நிலம் சிங்களக் குடியேற்றமாக மாற்றப்படுகின்றது.

பட்டிப்பளை என்று சொல்லப்படுகின்ற எமது தமிழ்ப்பிரதேசம் இப்பொழுது கல்லோயாவாக மாற்றப்பட்டு முற்று முழுதாக சிங்கள மயப்படுத்தப்பட்டிருக்கிறது.

கொல்லன்வெளி எனச் சொல்லப்படுகின்ற இடங்கள் சிங்களப்பிரதேசமாக மாற்றப்பட்டுள்ளது.

குடியேற்றம் மட்டுமல்ல தமிழர்கள் குடியேற்றங்களில் மக்களை இராணுவத்தினர் துரத்திவிட்டு இரவோடு இரவாக சிங்களக் குடியேற்றங்களை மேற்கொண்டனர்.

இது எமது கண்களுக்கு முன்னால் நடந்து கொண்டிருக்கிற வரலாறு. காலங்காலமாக பூர்வீகமாக வாழ்ந்து வந்த தமிழ் மக்களை கந்தளாயில் இருந்து இரவோடு இரவாக சிங்களக் காவல்துறையினர் கலைத்தனர்.

இதே போல தென்தமிழீழத்தில் ஒவ்வொன்று ஒவ்வொன்றாக சிங்களவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டன.

அம்பாறையையும் மட்டக்களப்பையும் துண்டு போடுவதும்

திருகோணமலையையும் மட்டக்களப்பையும் துண்டு போடுவதும்

திருகோணமலையையும் வட தமிழீழத்தையும் துண்டு போடுவதும்

என தமிழர் தாயகப்பகுதிகளில் சிங்கள மயமாக்குவதே சிங்களப் பயங்கரவாதத்தின் நீண்ட காலக்கொள்கையாகும்.

இலங்கையின் எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் உண்மை நிலை இது தான்.

மணலாறு சிலோன் தியேட்டரில் பூர்வீகமாக இருந்த மக்கள் சிங்களக் காடையர்களால் அடித்து விரட்டப்பட்டு தற்போது முள்ளியவளையிலும் தண்ணீரூற்றுப் பகுதிகளிலும் வசித்து வருகின்றனர்.

சிங்கள இனவாத அரசானது சிங்களக் குடியேற்றங்களை நிறுவி அதற்குப் பாதுகாப்பாக இராணுவ முகாம்களை நிறுவி நீண்ட கால இன அழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்கின்றது.

வரலாறு எமக்குப் பாடங்களைக் கற்றுத்தருகின்றது. ஒவ்வொரு இன அழிப்புக்கு எதிராக அன்றைய எமது அரசியல் தலைவர்கள் அகிம்சை வழியில் போராடிய போதும் எதுவித பலனும் கிடைக்கவில்லை.

இறுதியாக மக்களிடம் அன்றைய தமிழ்த் தலைவர்கள் கேட்டார்கள், "எமக்கு தமிழீழ தனியரசுதான் தேவை. இதற்கு நீங்கள் சம்மதமா?" என்று.

மக்கள் அப்போது நடந்த ஜனநாயகத் தேர்தலின் ஊடாக தமிழீழத் தனி அரசு தான் எமக்கு தேவை என ஆணையைத் தந்தார்கள்.

அது மட்டுமல்ல தொடர்ந்து நடந்த ஒவ்வொரு தேர்தலிலும் ஆணையை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தினார்கள்.

அதாவது, அகிம்சை வழியில் அபிலாசைகள்- எதிர்ப்பார்ப்புக்களை- சிங்களவர்களிடம் இருந்து ஒருபோதும் பெற முடியாது என்பது கடந்தகால வரலாறு.

அதனால் தான் தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழத் தேசியத் தலைவரின் வழிகாட்டலின் கீழ் சுதந்திர தமிழீழ தேசத்தினை அமைப்பதற்காக விடுதலைப் போராட்டத்தினை நடத்தி மிகப்பெரிய அர்ப்பணிப்புக்களையும் சாதனைகளையும் செய்கின்றார்கள், தியாகங்களைப் புரிகிறார்கள்.

தமிழ் மக்களின் நல்வாழ்விற்காக சகலவற்றையும் அர்ப்பணிக்கின்ற விடுதலைப் புலிகள் தான் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்கிறோம் நாம். இதனை உலகம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதுவே யதார்த்தம்.

புலம்பெயர்ந்த வெளிநாடுகளில் வாழ்கின்ற தமிழ் மக்களும் இங்கு வாழ்கின்ற மக்களும் தனியரசுதான் வேண்டும் என்று சொல்கிறார்கள். சிறிலங்கா அரசிற்கு எத்தனையோ பெரிய வல்லரசுகள் உதவி செய்கிறது.

ஆனாலும் கூட முப்பது வருடங்களாக விடுதலைப் புலிகளை அழிக்க முடியாது உள்ளது. சிலவேளைகளில் நாம் சில தந்திரோபாய பின்வாங்குதல்களை மேற்கொண்டு அதன்பின்னர் அதைவிட இரட்டிப்புப் பாய்ச்சல்களை மேற்கொள்வது வழக்கம். இது எமது போரியல் தந்திரோபாயமாகும்.

எமது இயக்கத்தின் வளர்ச்சி ஒவ்வொரு கட்டத்திலும் சிங்கள இராணுவத்திற்கு ஏற்படுகின்ற தோல்வியில் தெரிகிறது.

சிங்கள அரசினது திட்டமாக தமிழர் தாயகப்பகுதிகளை முற்று முழுதாக கைப்பற்றி முழு இலங்கைத் தீவினையும் சிங்கள மயப்படுத்துவதேயாகும். இதற்கு எதிராக உலகத்தில் வாழ்கின்ற எட்டுக்கோடி தமிழர்களும் ஒன்றுபட்டு எழ வேண்டும் என்றார் பா. நடேசன்.

நன்றி: புதினம்

மன்னாரில் முன்நகர்வு முறியடிப்பு: 25 படையினர் பலி- 45 பேர் படுகாயம்

Puthinam Tamil Daily News Page @ Puthinam.com: "மன்னார் தேனுடையான் பகுதியில் சிறிலங்காப் படையினரின் பெருமெடுப்பிலான முன்நகர்வு நடவடிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 25-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 45-க்கும் அதிகமான படையினர் ப�"

மூதூர் கடற்றொழிலாளர்கள் மீதான மீன்பிடித் தடையானது மகிந்தவின் ஒரு அரசியல் பழிவாங்கல்?: "த மோர்ணிங் லீடர்"

திருகோணமலை மூதூர் கடற்றொழிலாளர்கள் மீதான மீன்பிடித் தடையானது மகிந்தவின் ஒரு அரசியல் பழிவாங்கலா என்று சிறிலங்கா தலைநகர் கொழும்பில் இருந்து வெளியாகும் "த மோர்ணிங் லீடர்" வார ஏடு கேள்வி எழுப்பியுள்ளது. கடந்த புதன்கிழமை வெளிவந்த த மோர்ணிங் லீடரின் கட்டுரை:

மூதூர் பகுதியில் காலை உணவை உட்கொள்ளாத சில பாடசாலை மாணவ, மாணவிகள் மயக்கமடைந்தனர்.

கிழக்கு வாழ் முஸ்லிம்கள் பிரச்சினைக்கு மேல் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

மூதூரில் மீன்பிடித் தடை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 3,000-க்கும் அதிகமான குடும்பங்கள் மீன்பிடித் தொழிலை நம்பியே தமது வாழ்க்கையை கொண்டு நடாத்துகின்றனர்.

உண்மையிலேயே பாதுகாப்பு காரணங்களுக்காகவா அல்லது வேறும் அரசியல் பழிவாங்கல்களின் காரணமாகவா இந்த மீன்பிடித் தடை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்பதை விளங்கிக்கொள்ள முடியாது மக்கள் குழப்பமடைந்துள்ளனர்.

மீன்பிடித் தடை உத்தரவினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக்கொடுக்க பல குழுக்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

குறைந்தபட்சம் கஞ்சி ஒன்றையேனும் காலை நேரத்தில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மீன்பிடித் தொழிலைத் தவிர வேறு தொழிலில் ஈடுபட வாய்ப்புக்கள் உண்டா? என்பது மூதூர் மீனவர்களைப் பொறுத்த வரையில் கேள்விக்குறியாகவே அமைந்துள்ளது.

மூதூர் மீனவர்களுக்கு உலகின் அனைத்துப் பாகங்களிலிருந்தும் அனுதாப அலை திரண்டு வந்த வண்ணம் உள்ளது.

அமெரிக்காவில் உள்ள நண்பர் ஒருவர் மின்னஞ்சல் மூலம் மூதூர் மீனவர்களின் நிலைமை குறித்து எனக்கு தகவல் அனுப்பியிருந்தார்.

கிழக்கு வாழ் மக்கள் இயற்கை பேரழிவு மற்றும் மனிதனால் மேற்கொள்ளப்பட்ட அழிவு என்பவற்றினால் சொல்லொனாத் துயரங்களை கடந்த காலங்களில் அனுபவித்துள்ளனர்.

முஸ்லிம் மீனவர்கள் இரண்டு கிலோ மீற்றர்களுக்கு மட்டுமே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ள அதேநேரத்தில் சிங்கள மீனவர்களுக்கு அவ்வாறான எவ்வித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை.

திருகோணமலையில் நூற்றாண்டுகளாக மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வரும் முஸ்லிம்களுக்கு இன ரீதியான தடைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

கிழக்கு முஸ்லிம்கள் பயங்கரவாதத்திற்கு ஆதரவாகவோ அல்லது அரசாங்கத்திற்கும் எதிராகவோ செயற்பட்டுள்ளனரா என்ற கேள்விக்கு எந்தவித பதிலும் இல்லை என்றே குறிப்பிடலாம்.

கடந்த 10 ஆம் நாள் திருகோணமலையில் கப்பல் மூழ்கடிக்கப்பட்டதனைத் தொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததாகவும், மீன்பிடித்தலுக்கான தடை நேற்றைய நாள் முதல் தளர்த்தப்பட்டதாகவும் கடற்படை பேச்சாளர் "சண்டே லீடர்" பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.

எனினும் கடந்த 20 மற்றும் 21 ஆம் நாட்களில் மீன் பிடித்தொழிலுக்கு அனுமதிக்கப்பட்ட போதிலும் அதன் பின்னர் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

பருவகால மாற்றம் காரணமாக மீன்பிடித் தொழிலுக்கு உசிதமாக காலங்களில் மீன்பிடியில் ஈடுபட்டால் மட்டுமே பயனடைய முடியும் என மீனவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

போசாக்கு குறைபாடு காரணமாக பாடசாலை செல்லும் மாணவர்கள் மயக்கமடைந்துள்ளனர். எனினும், இது தொடர்பிலான எந்தவொரு முறைப்பாடும் தமக்கு கிடைக்கவில்லை என மூதூர் பிரதேச சபையின் தலைவர் ரஜீஸ் தெரிவித்துள்ளார்.

அவர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மூதூரில் வசிக்கும் அப்பாவி மீனவர்களின் ஒரே வாழ்வு ஆதாரமாக மீன்பிடித் தொழில் காணப்படுகின்றது.

இந்தத் தொழிலின் மூலமே தமது அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்கின்றனர்.

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு நாடாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இத்தகைய நாடுகளை மேற்கு உலகம் சோசலிச நாடுகளாகவே கருதுகின்றன. எனினும் தற்போது ஜனநாயகம் என்பது ஊடகவியலாளர்களின் உடல்களை பதம் பார்க்கப்பயன்படும் ஓர் கூரிய ஆயுதமாகவே பயன்படுத்தப்படுகின்றது எனக்கூறின் அது பிழையாகாது.

உண்மையில் சோசலிச கொள்கை என்பது ஆட்சியாளனும், பொதுமகனும் ஒன்றே என்பதாகும். எனினும், ஆட்சியாளர்கள் செல்வதற்காக பல மணி நேரம் கத்திரி வெய்யிலிலும், கடும் மழையிலும் குடிமக்கள் காத்திருக்க வேண்டிய நிலையொன்றே தோன்றியுள்ளது.

பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 157 ரூபாவாகவும், டீசல் ஒரு லீற்றரின் விலை 110 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

சோசலிச நாடுகளில் உழைக்கும் வர்த்தகத்தினருக்கு உரிய வகையில் பொருட்கள் சேவைகள் விநியோகிக்கப்பட வேண்டியது இன்றியமையாத ஒன்றாகக் காணப்படுகின்றது.

இதனையே மகாகவி பாரதி "தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்" என தனது கவிதையில் அக்கினி பறக்கத் தெரிவித்திருந்தார்.

நாட்டில் எவரும் வெறும் வயிற்றுடன் உறங்காமல் இருக்காதவாறு பார்த்துக்கொள்வதே ஆட்சி அதிகாரத்தின் தலையாய கடயைமாகும். இதனாலேயே அரசாங்கம் மூதூர் மீனவர்களுக்கு உணவு நிவாரணங்களை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பல அமைச்சர்கள் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்றனர். இதனை ஓர் இனப்பிரச்சினையாக முன்னெடுக்க முடியும்.

மாவிலாறு பகுதியில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிதி உதவிகள் வழங்கப்பட்டமை நினைவில் கொள்ள வேண்டிய ஓர் விடயமாகும்.

அப்பாவி முஸ்லிம் மீனவர்கள் வறுமையின் காரணமாக தற்கொலை செய்தோ அல்லது போசாக்கு குறைபாட்டினால் வாடியதன் பின்னரோ நீலிக்கண்ணீர் வடிப்பதில் எவ்வித பயனுமில்லை.

முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகள் முதலில் தமது ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து விழித்தெழ வேண்டும். அப்போதுதான் அப்பாவி மீனவர்களை காப்பாற்ற முடியும்.

இந்த நிலைமை குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற உள்நாட்டு இணையத்தளமொன்றின் செய்தியாளரிடம் ரவூப் ஹக்கீமிடம் இது பற்றி வினவுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மீன்பிடித் தடை ஓர் அரசியல் பழிவாங்கல் சம்பவமா என்று எண்ணத் தோன்றுகின்றது.

அது உண்மையாக இருந்தால், ஜனநாயக நாட்டில் தமக்கு விரும்பிய ஓர் வேட்பாளனுக்கு வாக்களிக்கக்கூடிய உரிமை மறுக்கப்பட்டுள்ளது. அல்லது அவ்வாறு சுதந்திரமாக வாக்களிப்பதனால் பாரிய பின்விளைவுகளை அப்பாவி வாக்காளர்கள் சந்திக்க வேண்டிய பாதகமான அரசியல் பின்னணியொன்று உருவாகியுள்ளது. இதனை அதிகார துஷ்ப்பிரயோகம் என்று சொல்வதனைவிட வேறு எவ்வாறு குறிப்பிட முடியும்.

சமயத் தலைவர்கள், பெண்கள், அரசாங்க ஊழியர்கள், சிறுவர்கள் உள்ளிட்ட 50-க்கும் அதிகமானோர் மிக மோசமாக தாக்கப்பட்டுள்னளர். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் குண்டர் குழுவினால் இந்த அட்டூழியம் மேற்கொள்ளப்பட்டதாக "நவமணி" தமிழ் நாளிதழை மேற்கோள் காட்டி சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

மூதூர் பிரதேச மீனவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை ஓர் அரசியல் பழிவாங்கலாக இருந்தால் தனது விரல்களாலேயே கண்களை குத்துவதற்கு நிகரான செயலாகும்.

மீன்பிடித் தடைக்கு எதிராக மூதூர் மீனவர்கள் கடந்த திங்கட்கிழமை முழு அடைப்பில் ஈடுபட்டனர். சுமார் 2,000 மீனவர்கள் இந்த முழு அடைப்பில்கலந்து கொண்டனர்.

தமது வாழ்வாதாரத்தை மேற்கொள்ள முடியாத நிலையில் மூதூர் மீனவர்கள் சொல்லொன்னா துன்பங்களை எதிர்நோக்க நேரிடும் என்பதில் எவ்வித சந்தேகமும். எனவே இந்த பிரச்சினைக்கு விரைந்து தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும்.

முஸ்லிம் அமைச்சர்களே! அல்லா உங்களிடம் நீங்கள் என்ன பதவி வகித்தீர்கள் என்று கேட்கப் போவதில்லை. மாறாக உங்களது தொழிலை நீங்கள் நேர்மையாக செய்தீர்களா என்றே கேட்பான் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: புதினம்

சிறிலங்காப் படையினர் அச்சுறுத்தலால் தொழிலை கைவிட்டு கரை சேர்ந்த கடற்றொழிலாளர்கள்

வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் தூண்டில் தொழிலில் ஈடுபட்ட கடற்றொழிலாளர்களை சிறிலங்காப் படையினர் அச்சுறுத்தி வெளியேற்றியுள்ளனர்.

இதனால் கடற்றொழிலாளர்கள் தூண்டில் தொழிலை கைவிட்டு விட்டு கரை சேர்ந்தனர்.

உடுத்துறையைச் சேர்ந்த குரு என்பவரது 200 தூண்டில்கள் கடலில் வெட்டப்பட்ட நிலையில் மீன்பிடிப் படகு குறுகிய இடைவெளியில் கரை சேர்ந்துள்ளது.

இந்தக் கடற்பரப்பில் சிறிலங்கா வான்படைக்குரிய எம்ஜ-24 ரக உலங்குவானூர்தி இன்று சனிக்கிழமை காலை 7:00 மணிமுதல் 10:00 மணிவரை பறப்பில் ஈடுபட்டன.

5-க்கும் அதிகமான டோறா பீரங்கி கலங்கள் நாகர்கோவிலுக்கும் வெற்றிலைக்கேணி வரை தொடர்ச்சியான சுற்று நடவடிக்கையில் ஈடுபட்டன.

சிறிலங்கா வான் படையின் வேவு வானூர்தி கடற்பகுதியில் முற்பகல் 11:00 மணி தொடர் வேவு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

துறையில் இருந்து கடலை நோக்கி மீன்பிடிப் படகுகளை இலக்கு வைத்தும் மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்தும் சிறிலங்காப் படைகள் எறிகணைத் தாக்குதலையும் நடத்தியுள்ளன.

இதனால் கடலில் கைவிடப்பட்ட மீன்பிடித்தூண்டில் உபகரணங்களை கடற்றொழிலாளர்கள் தேடிச்செல்ல இயலாமல் கைவிட்டதுடன் அப்பகுதி மக்கள் அச்சத்துடன் காணப்பட்டனர்.

10-க்கும் அதிகமான கடற்றொழிலாளர்களின் படகுகள் தூண்டில் தொழிலை கைவிட்டு கரை சேர்ந்தார்கள்.

நன்றி: புதினம்

சிறிலங்காவில் தேர்தல்களை நடத்த தடை விதிக்கக்கோரி ஐ.தே.க. வழக்குத் தொடர முடிவு

சிறிலங்காவின் 17 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை செயற்படுத்தி அரசியலமைப்பு சபையை நிறுவிடவும் சுயாதீன ஆணைக்குழு செயற்படும் வரை எந்தவொரு தேர்தலையும் நடத்த தடைவிதித்தும் தேர்தல் ஆணையாளருக்கு தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி தலைமை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் அடுத்த வாரம் தலைமை நீதிமன்றத்தினை நாடவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

சுயாதீன ஆணைக்குழுவை செயற்படுத்தும் வரை இந்நாட்டில் சுதந்திரமான, நேர்மையான, பக்கச்சார்பற்ற தேர்தல் நடைபெறாது என்று சுட்டிக்காட்டிய திஸ்ஸ அத்தநாயக்க, தேர்தல் மோசடிகள் மற்றும் முறைகேடுகள் தொடர்பாக செயற்படுவதற்கு தேர்தல் ஆணையாளருக்கு போதியளவு அதிகாரமோ நிர்வாக கட்டமைப்போ இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

நன்றி: புதினம்

சிறிலங்கா அனைத்து கட்சிக்குழுவில் மற்றொரு துணைப்படை

இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்கான சிறிலங்காவின் அனைத்து கட்சிக்குழுவில் சிறிலங்காப் படையுடன் சேர்ந்தியங்கும் துணைப்படையான பிள்ளையான் குழுவையும் இணைத்துக்கொள்ள அரச தலைவர் மகிந்த ராஜபக்ச முடிவு செய்துள்ளார்.

அடுத்த வாரம் நடைபெற உள்ள சிறிலங்காவின் அனைத்து கட்சிக்குழு கூட்டத்துக்கு பிரதிநிதியை அனுப்புமாறு பிள்ளையானுக்கு மகிந்த தகவல் அனுப்பியுள்ளார்.

அனைத்து கட்சிக்குழுவில் தமது குழுவையும் இணைக்க வேண்டும் என்று கிழக்குத் தேர்தலுக்கு முன்பாக மகிந்தவுக்கு பிள்ளையான் நிபந்தனை விதித்திருந்ததாகவும் கூறப்படுகின்றது.

சிறிலங்காவின் அனைத்து கட்சிக்குழுவில் மற்றொரு துணைப்படையான டக்ளசின் ஈ.பி.டி.பி. ஏற்கெனவே இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி: புதினம்

சிறிலங்காவின் ஆளும் கட்சி நா.உ. ரெஜி ரணதுங்க மறைவு

சிறிலங்காவின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் ரெஜி ரணதுங்க (வயது 71) இன்று சனிக்கிழமை காலமானார்.

மறைந்த ரெஜி ரணதுங்க, சிறிலங்கா துடுப்பாட்ட அணியின் முன்னாள் தலைவரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான அர்ஜூன ரணதுங்கவின் தந்தை ஆவார்.

1989 ஆம் ஆண்டு சிறிலங்கா நாடாளுமன்றத்துக்கு முதன் முறையாக அவர் தெரிவு செய்யப்பட்டார். அதன் பின்னர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அரசாங்கங்களில் பிரதி அமைச்சராகவும் அமைச்சராகவும் அவர் பணியாற்றினார்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் அவர் நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்படும் முன்னர் சப்ரகமுவ மாகாண ஆளுநராகவும் பணியாற்றினார். சாலை விபத்தில், சிறீபதி சூரியராச்சி உயிரிழந்ததையடுத்து அவரிடன் வெற்றிடத்துக்கு ரெஜி ரணதுங்க நியமிக்கப்பட்டிருந்தார்.

நன்றி: புதினம்

இந்தியாவுக்கு கிழக்குப் பிரதேச பகுதிகள் தாரை வார்க்கப்படுகின்றன: அனுரகுமார திசநாயக்க

இலங்கையின் கிழக்குப் பிரதேசத்தில் உள்ள நிலாவெளி, புல்மோட்டை, வாழைச்சேனை மற்றும் கந்தளாய் சீனித் தொழிற்சாலை பகுதிகள் இந்தியாவுக்குத் தாரை வார்க்கப்படுவதாக ஜே.வி.பி. கட்சியின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசநாயக்க குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் கூறியுள்ளதாவது:

கிழக்குப் பிரதேச பகுதிகள் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்த நாட்டின் உள் அரசியலில் தலையிடுவதன் மூலமாக புவியியல் மற்றும் பொருளியல் நலன் வாய்ந்த கிழக்குப் பிரதேச பகுதிகளின் மூலம் பயனடைய இந்தியா முயற்சிக்கிறது.

நிலாவெளி, புல்மோட்டை, வாழைச்சேனை மற்றும் கந்தளாய் சினீத் தொழிற்சாலை பகுதி ஆகியவை இந்தியாவுக்கு தாரை வார்க்கப்பட உள்ளன.

சம்பூரில் இந்தியா சார்பில் அனல் மின்நிலையம் அமைக்கப்பட உள்ளது. ஆனால் சம்பூர் பகுதியில் வாழ்ந்து வந்த 5,000-க்கும் அதிகமான மக்கள் திருகோணமலையில் அகதி முகாம்களில் வசித்து வருகின்றனர்.

சம்பூரை இந்தியாவுக்கு தாரை வார்ப்பதால் அப்பகுதி மக்களை மீள்குடியேற மகிந்த அரசு அனுமதி மறுத்து வருகின்றது.

கிழக்கில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடையே இன மோதல்களை உருவாக்குவதற்கு மகிந்த அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும்.

கிழக்குப் பிரதேச தேர்தலே இந்தியாவின் அறிவுறுத்தலின் கீழ் நடத்தப்பட்டதுதான். அங்கே நீதியானதும் நேர்மையானதுமான தேர்தல் நடத்தப்படவில்லை என்றார் அவர்.

நன்றி: புதினம்

மேற்குலகின் பொருளாதார தடைகள் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்: சிறிலங்கா எச்சரிக்கை

மனித உரிமை மீறல்களைக் காரணம் காட்டி சிறிலங்கா மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பொருளாதார தடைகளை கொண்டு வருமாயின் நடைபெற்று வரும் நீண்டகாலப் போரில் பாரிய பாதிப்பினை ஏற்படுத்தும் என்று சிறிலங்கா அரசாங்கம் எச்சரித்துள்ளது.

இது தொடர்பில் அமெரிக்காவின் வொசிங்ரன் நகரில் இருந்து சிறிலங்காவின் அனைத்துலக வர்த்தகத்துறை அமைச்சர் ஜி.எல்.பீரீஸ் கூறியதாவது:

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்பன பல உதவி திட்டங்களை நிலுவையில் வைத்துள்ளதுடன், சிறிலங்காவிற்கான வர்த்தக சலுகைகளை நிறுத்துவது தொடர்பாகவும் விவாதங்களையும் நடத்தி வருகின்றன. மனித உரிமை மீறல்களை முன்னிலைப்படுத்தியே இந்த தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் தொடர்பான கரிசனைகளும், புரிந்துணர்வுகளும் அனைத்துலக சமூகத்திற்கு அவசியம்.

உதவிகளை நிறுத்துவது, ஜி.பி.எஸ் பிளஸ் வர்த்தக உடன்பாட்டில் இருந்து வெளியேறுவது என்பன எந்த முன்னேற்றங்களையும் ஏற்படுத்தாது. இது வறுமையை மேலும் அதிகரிக்குமே தவிர அதன் மூலம் எம்மை பலவந்தப்படுத்த முடியாது.

மேற்குலகம் ஜி.பி.எஸ் பிளஸ் உடன்பாட்டில் இருந்து விலகுமாக இருந்தால் அது பல நூறாயிரம் வறிய மக்களின் வேலை வாய்ப்புக்களை பாதிக்கும் என்றார் அவர்.

இதனிடையே சிறிலங்காவின் இனப்பிரச்சனைக்கு இராணுவத்தீர்வு சாத்தியமற்றது எனவும் அரசியல் வழிகளின் மூலம் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படவேண்டும் எனவும் அமெரிக்கா கடந்த வியாழக்கிழமை தெரிவித்துள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

நன்றி: புதினம்