Saturday, May 24, 2008

பலியெடுக்கப்பட்ட 16 உடல்களும் உறவுகளின் கதறல்களுடன் ஒரே இடத்தில் அடக்கம்

Puthinam Tamil Daily News Page @ Puthinam.com: "சிறிலங்காப் பயங்கரவாத அரசு நேற்று கிளைமோர்த் தாக்குதலை நடத்தி பலியெடுத்த 6 சிறார்கள் உட்பட்ட 16 பேரின் உடல்கள் இன்று சனிக்கிழமை மக்கள் வணக்கத்துடன் ஓரே இடத்தில் மக்களின் பெருங் கதறல்களுடன் அடக்கம் செய்யப்பட்டன."

ஜே.வி.பி.யில் தலைவர்-மத்திய குழு உறுப்பினர்கள் அதிரடி மாற்றம்

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (27.05.08) நடைபெறவுள்ள ஜே.வி.பி.யின் 5 ஆவது தேசிய மாநாட்டின் போது அக்கட்சிக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட உள்ளதாக தற்போதைய தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் புதிய மத்திய குழு, புதிய நிர்வாகக் குழு ஆகியன நியமிக்கப்படவுள்ளன.

அம் மாநாட்டில் பல முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.

தேசிய மாநாட்டில் பங்கேற்குமாறு விமல் வீரவன்ச மற்றும் அவருடன் இணைந்துள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்திருப்பதாகவும் பத்திரிகை அறிவித்தல்களுடன் அவர்கள் சிலர் வழங்கியிருக்கும் முகவரிகளுக்கு பதிவுத் தபாலில் அழைப்பு அனுப்பப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

விமல் வீரவன்ச உட்பட கட்சியை விட்டுச் சென்றவர்கள் தொடர்பில் மத்திய குழுவில் இதுவரை எந்தவித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிழக்குத் தேர்தல் மோசடிகள் குறித்து வழக்கு: ஐ.தே.க.

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் நடைபெற்ற மோசடிகள் மற்றும் அநீதிக்கு எதிராக எதிர்வரும் வாரம் தலைமை நீதிமன்றத்திலும் மேன்முறையீட்டு நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர உள்ளதாக சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:

தலைமை நீதிமன்றத்தில் அடிப்படை மனித உரிமை வழக்கும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தேர்தலின் தவறுகள் பற்றிய வழக்குகளும் தொடர உள்ளோம்.

இந்த சட்ட நடவடிக்கைகளை எடுக்கும் அதே நேரத்தில் தேர்தல் மோசடிகளுக்கு எதிராக நாடளாவிய ரீதியிலான எதிர்ப்பு நடவடிக்கைகளை ஜூன் மாத நடுப்பகுதியில் தொடங்குகின்றோம்.

சுயாதீன காவல்துறை ஆணைக்குழு மற்றும் தேர்தல் ஆணைக்குழுவை செயற்படுத்துமாறு அழுத்தம் கொடுக்கும் எதிர்ப்பு நடவடிக்கைகளுடன் அதனை இணைக்க உள்ளோம் என்றார் திஸ்ஸ அத்தநாயக்க.

சிறிலங்கா வெளியேற்றம் - ஐக்கிய நாடுகள் சபையின் வெற்றி: மனித உரிமைகள் கண்காணிப்பகம்

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையில் சிறிலங்கா உறுப்புரிமை இழந்தமையானது ஐக்கிய நாடுகள் சபையின் வெற்றியாகும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.

நியூயோர்க்கை தலைமையிடமாகக்கொண்டு செயற்படும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் சிறிலங்காவுக்கான அங்கத்துவம் மறுக்கப்பட்டதன் ஊடாக மனித உரிமைகள் சபை சிறந்த தரத்தை எட்டியுள்ளது.

இலங்கையில் மனித உரிமைகளினால் பாதிக்கப்பட்டோருக்கும், மனித உரிமைகள் பேரவைக்கும் கிடைக்கப்பெற்ற பாரிய வெற்றியாக உள்நாட்டு- வெளிநாட்டு மனித உரிமைகள் ஆர்வலர்கள் சிறிலங்காவின் தோல்வியை கருதுகின்றனர்.

47 உறுப்பினர்களைக் கொண்ட மனித உரிமைகள் சபையில் 15 ஆசனங்கள் வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்படும்.

ஆசியப் பிராந்தியத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 4 ஆசனங்களுக்கு 6 நாடுகள் போட்டியிட்டன.

ஜப்பான் 155 வாக்குகளுடனும்

தென் கொரியா 139 வாக்குகளுடனும்

பாகிஸ்தான் 114 வாக்குகளுடனும்

பாஹ்ரெய்ன் 142 வாக்குகளுடனும் ஆசியப் பிராந்திய நாடுகளுக்கான 4 ஆசனங்களையும் வெற்றி கொண்டன.

வாக்கெடுப்பில் போட்டியிட்ட சிறிலங்கா 101 வாக்குகளையும்

கிழக்குத் திமோர் 92 வாக்குகளையும் மட்டுமே பெற்றன.

சபையில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகள் உயர்ந்த தரத்தில் மனித உரிமைகளைப் பேணிப் பாதுகாக்க வேண்டும் என்று 2006 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளினால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது.

2006 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட புதிய மனித உரிமைகள் சபையின் தொடக்க உறுப்புரிமை நாடுகளில் சிறிலங்காவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், இம்முறை நடைபெற்ற வாக்கெடுப்பில் வெற்றிபெற சிறிலங்கா தீவிர முயற்சிகளில் ஈடுபட்டது.

அங்கத்துவ உறுப்புரிமையை மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கு பயன்படுத்தாது, மனித உரிமை மீறல்களுக்கு எதிரான முறைப்பாடுகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முயற்சித்த நாடான சிறிலங்காவின் அங்கத்துவம் நிராகரிக்கப்பட்டமை பாராட்டுக்குரியது என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியப் பிராந்திய பேச்சாளர் ரீவ் ச்ருசோவ் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு சிறிலங்கா, கடந்த ஆண்டு பெலாரஸ் ஆகிய நாடுகளின் உறுப்புரிமை மறுக்கப்பட்டதன் மூலம் மனித உரிமைகளை மீறும் நாடுகளுக்கு நல்லதோர் பாடம் கற்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையில் கிடைக்கப்பெற்ற அங்கத்துவத்தை பயன்படுத்தி பல்வேறு மனித உரிமை மீறல்களை சிறிலங்கா அரசாங்கம் வலிந்து மேற்கொண்டுள்ளதாக அரச சார்பற்ற அமைப்புக்கள் சுட்டிக்காட்டுகின்றன.

தண்டனைகள் மற்றும் விமர்சனங்களில் இருந்து தப்பித்துக்கொள்வதற்கான ஓர் பாதுகாப்புக் கவசமாக தனது உறுப்புரிமையை சிறிலங்கா பயன்படுத்தியதாக அவை குற்றம் சாட்டுகின்றன.

ஆட்கடத்தல், படுகொலைகள், காணாமல் போதல், சித்திரவதைகள் போன்ற சம்பவங்கள் குறித்த விசாரணைகளின் போது ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படவில்லை என்று அனைத்துலக நாடுகளைச் சேர்ந்த அரச சார்பற்ற நிறுவனங்கள் குற்றம் சாட்டியிருந்தன.

தென் ஆபிரிக்காவின் டெஸ்மன் டுட்டு, ஆர்ஜென்டீனாவின் அடொல்ப் இஸ்குவில் மற்றும் அமெரிக்காவின் ஜிம்மி காட்டர் ஆகிய நோபல் சமாதான விருதாளர்கள் மனித உரிமைகள் சபையில் சிறிலங்காவுக்கான அங்கத்துவம் வழங்கப்படக்கூடாது என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.

அரச சார்பற்ற நிறுவனங்களின் எதிர்ப்பு காரணமாக 2007 ஆம் ஆண்டு பெலராஸ் அரசாங்கத்தின் உறுப்புரிமை வெற்றிகரமாக நீக்கப்பட்டது.

மனித உரிமைகள் சபையில் இருந்து சிறிலங்கா நீக்கப்பட்டமையின் மூலம் பல்வேறு சித்திரவதைகள் மற்றும் மனித உரிமை மீறல் சம்பவங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கிடைத்துள்ளதாக ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் திட்ட இணைப்பு அதிகாரி மைக்கல் அன்ரனி தெரிவித்துள்ளார்.

இத்தோல்வியின் மூலம் வலுவான செய்தி ஒன்று சிறிலங்கா அரசாங்கத்திற்கு விடுக்கப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வாக்கெடுப்பு முடிவு சிறிலங்கா தொடர்பாக அனைத்துலக சமூகத்தில் புதிய பேச்சுவார்த்தைகள் உருவாக வழிகோலும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சிறிலங்கா அரசாங்கமும், அதன் படைத்தரப்பும் மேற்கொள்ளும் மனித உரிமை அட்டூழியங்கள் நிறுத்தப்பட்டு, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கண்காணிப்பாளாளனின் உதவியைப் பெற்றுக்கொள்ள இந்த வாக்கெடுப்பு வாய்ப்பாக அமையும் என்றும் மைக்கல் அன்ரனி குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினரும் பாரியளவிலான மனித உரிமைகள் மீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

எனினும், பொதுமக்களுக்கு எதிராக அரசாங்கத்தினால் கட்டவிழ்த்து விடப்படும் உரிமை மீறல்கள் இதனால் நியாயப்படுத்தப்பட முடியாது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கண்காணிப்பகம் நிறுவப்படுதவன் மூலம் நாட்டு மக்கள் இருதரப்பினாலும் மேற்கொள்ளப்படும் மனித உரிமை சம்பவங்களிலிருந்து பாதுகாப்பை பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பு ஏற்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகள் பேரவைக்கான ஐந்து பிராந்தியங்களில் ஏனைய இரண்டு பிராந்திய ஆசனங்களுக்கு போட்டி நிலவியது.

மேற்கு ஐரோப்பிய பிராந்தியத்திற்கு ஒதுக்கப்பட்ட இரண்டு ஆசனங்களை ஐக்கிய இராச்சியமும், பிரான்சும் கைப்பற்றின.

கிழக்குப் ஐரோப்பிய பிராந்தியத்திற்கான ஆசனங்களை ஸ்லோவாக்கியா மற்றும் உக்ரேய்ன் ஆகிய நாடுகள் கைப்பற்றின.

அனைத்துப் பிராந்திய நாடுகளுக்கும் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதே எமது விருப்பம் என்று ஆபிரிக்க ஜனநாயக அமைப்பைச் சேர்ந்த பிரான்க் கமுங்கா தெரிவித்துள்ளார்.

எவ்வாறு எனினும், இம்முறை தெரிவு செய்யப்பட்ட அனைத்து நாடுகளும் மனித உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பில் காத்திரமான பங்களிப்பாற்ற வேண்டியது இன்றியமையாததாக அமைந்துள்ளது.

புதிய அங்கத்துவ நாடுகள் அரசியல் மற்றும் வேறு காரணிகளை புறம் தள்ளி மனித உரிமைகளினால் பாதிக்கப்படுவோரை பாதுகாப்பதற்கு அதிக முனைப்பு காட்ட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தான் மற்றும் பாஹ்ரெய்ன் ஆகிய நாடுகளில் மனித உரிமை விவகாரங்கள் மறுசீரமைக்கப்பட வேண்டும் என வினைத்திறனான மனித உரிமைகள் சபை கோரிக்கை விடுத்துள்ளது.

பாகிஸ்தானும், பாஹ்ரெய்னும் தற்போது அனைத்துலக மனித உரிமைகள் தர நிர்ணயங்களை உச்ச அளவில் பேணிப் பாதுகாக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஜெனீவா பணிப்பாளர் ஜூலிட்டி டி ரிவிரோவா தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் பேரவையை மேலும் வலுப்படுத்தும் வகையில் இரு நாடுகளும் செயலாற்ற வேண்டும் எனவும் கோரியுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

puthinam

விடைபெற்றார் மாவீரன் பிரிகேடியர் பால்ராஜ

Puthinam Tamil Daily News Page @ Puthinam.com: "தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதிகள், போராளிகள், தாயக மக்கள், உலகத் தமிழினம் விடைகொடுக்க மாவீரன் பிரிகேடியர் பால்ராஜ் தாய் மண்ணில் இன்று விதைக்கப்பட்டார்."

Friday, May 23, 2008

முறிகண்டியில் சிறிலங்காப் படை நடத்திய கிளைமோர்த் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 16 பேர் படுகொலை

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள முறிகண்டி அக்கராயன் வீதியில் சிறிலங்காப் படையினர் நடத்திய கிளைமோர்த் தாக்குதலில் சிறுவர், சிறுமியர், குழந்தைகள் உட்பட 16 அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி இரணைமடுச் சந்தியைச் சேர்ந்த மக்கள் முழங்காவிலுக்குச் சென்று திரும்பிக்கொண்டிருந்த போது சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியினர் இக்கிளைமோர்த் தாக்குதலை நடத்தினர்.

ஹையஸ் ஊர்தியில் மக்கள் சென்று திரும்பிக்கொண்டிருந்த போது இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2:00 மணியளவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.



முறிகண்டி கோவிலில் இருந்து அக்கராயன் வீதியில் இரண்டு கிலோமீற்றர் தொலைவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதில் ஒரு குழந்தை உட்பட 16 பேர் சம்பவ இடத்திலேயே படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 4 பேர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிறிலங்கா பயங்கரவாத அரசு திட்டமிட்டு அப்பாவிப் பொதுமக்களை படுகொலை செய்யும் வகையில் இத்தாக்குதலை நடத்தியுள்ளது.



puthinam

நிகரற்ற ரணகளச் சூரன் மாவீரன் பிரிகேடியர் பால்ராஜ்: வைகோ

நிகரற்ற ரணகளச் சூரனாக மாவீரன் பிரிகேடியர் பால்ராஜ் திகழ்ந்தார் என்று தமிழ்நாட்டின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ தனது வீரவணக்க அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் சென்னையில் வைகோ இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

ஈழ விடுதலைப் புலிகளின் முதல் வரிசைத் தளகர்த்தர்களுள் ஒருவரான பிரிகேடியர் பால்ராஜ் மறைந்தார் என்ற செய்தியை அறிந்த மாத்திரத்தில் ஒருகணம் அதிர்ச்சியிலும், துக்கத்திலும் என் உள்ளம் உறைந்தது.

மாவீரர் பால்ராஜ் என்ற பெயரை உச்சரித்தாலே களத்தில் நிற்கும் வேங்கைகளின் நரம்புகளில் மின்சாரம் பாயும்.

பால்ராஜின் ஒரு கட்டளை முழக்கம் கேட்டால் போதும், பகைவர் படை அணி பல மடங்கு இருப்பினும், சரம் சரமாகக் குண்டுகள் சீறி வந்தாலும், அவற்றை எதிர்கொண்டு எதிரிகள் முகாமைச் சின்னாபின்னம் ஆக்குவர் விடுதலைப் புலிகள்.

பெரும் தொகை கொண்ட சிங்கள இராணுவத்தினரை, குறைந்த எண்ணிக்கை உள்ள வேங்கைகளைக்கொண்டு பலமாகத் தாக்கி வீழ்த்தி பலமுறை புறமுதுகிட்டு ஓடச்செய்த வீரத்திலகம்தான் பிரிகேடியர் பால்ராஜ்.

1989 ஆம் ஆண்டு, பெப்ரவரி மாதம் 23 ஆம் நாள், இயக்கத்தின் முன்னணித் தளபதிகளை என்னிடம் விடுதலை வேங்கைகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் அறிமுகம் செய்துவைத்த போது, அவர்களுள் முக்கியமானவர் பிரிகேடியர் பால்ராஜ்.

குத்திக்கிழிக்கும் கூரிய முள்மரங்கள் அடர்ந்த காடுகளின் வழியாகச் செல்கையில், எந்த நேரத்திலும் இருநாட்டு இராணுவமும் தாக்குகின்ற அபாயத்தின் ஊடே என்னைப் பாதுகாப்பாக அனுப்பி வைக்க வேண்டும் என்பதற்காகத் தேர்ந்து எடுத்து உடன் அனுப்பி வைத்த வீரர்களில் சிலர் அதன்பின் நடைபெற்ற சமர்களில் வீரமரணம் எய்தினர்.

முக்கிய தளபதிகள் பல சமர்களில் சாகச வெற்றிகளைக் குவித்து உள்ளனர். மூன்று நாட்கள் தொடர்ந்து வன்னிக்காடுகள் ஊடே நடக்கையில் கிளிநொச்சிக்குச் செல்லும் சாலையை நாங்கள் கடக்க நேர்கையில், இராணுவத்தினர் அந்த வழி வருவதை அறிந்து, அருகில் காட்டுக்கு உள்ளே நாங்கள் பதுங்க நேர்ந்தது. அப்பொழுது பல மணி நேரம் பால்ராஜ் அவர்களுடன் உரையாடுகின்ற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவருடைய உடலில் குண்டுகள் பாயாத இடமே இல்லை. பலமுறை படுகாயமுற்று, அதில் இருந்து மீண்டு, களங்களில் படை நடத்தி உள்ளார். ஒவ்வாரு சண்டையிலும் அவருக்கு நேர்ந்த மயிர்க்கூச்செரியும் அனுபவங்களை அவர் சொல்லக்கேட்டு மெய்சிலிர்த்துப் போனேன். என் பாதுகாப்புக்காக உடன் வந்த புலிப்படைத் தம்பிகள், தளபதி பால்ராஜ் மீது கொண்டு இருக்கிற பாசம் மிக்க விசுவாசத்தையும், மதிப்பையும், அவர்கள் சொல்லச்சொல்லக் கேட்டுப் பிரமித்துப் போனேன்.

25 ஆம் நாள் இரவு 10:00 மணியளவில், பேசாலை பகுதியில், கடற்கரை மணலில் என்னைப் படகில் ஏற்றி விடை கொடுத்து அனுப்புவதற்கு முன்பு, பால்ராஜ் அவர்களைக் கட்டித்தழுவிக் கொண்டேன். அவரது காலணிகள் கிழிந்து போயிருந்ததால், என்னுடைய புதிய காலணிகளை நீங்கள் பயன்படுத்துங்கள் என்று கொடுத்தேன். அந்த இரவில் தொடுவாய் கடற்கரையில் நாங்கள் இறங்கத்திட்டமிட்டு இருந்ததால், மறுநாள் காலையில் 900-க்கும் அதிகமான இராணுவத்தினைர் எங்களைச் சுற்றி வளைத்துத் தாக்குதல் நடத்தப்போவதும், சீறிப்பாய்ந்த குண்டுமழையில், நூலிழையில் நான் உயிர் தப்புவேன் என்பதும், என்னுடன் வந்த வீரத்தம்பி சரத் என்ற பீட்டர் கென்னடி, உடல் சல்லடைக்கண்களாகத் துளைக்கப்பட்டுக் கொல்லப்படுவான் என்பதையும் நான் கற்பனைகூடச் செய்யாத சூழலில் பால்ராஜிடம் இருந்து விடைபெற்றேன்.

அதன் பின்னர், கடந்த 19 ஆண்டுகளில், ஈழத்துப் பிள்ளைகளிடம் தொலைபேசியிலும், புலம்பெயர்ந்த நாடுகளிலும் நான் பேச நேரும்போதெல்லாம் பால்ராஜ் அவர்களைப் பற்றி விசாரிப்பேன். நலமாக இருக்கிறார். போர்க்களங்களில் சாதிக்கிறார் என்றே சொல்லி வந்தார்கள். ஆனால், அண்மையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர் இருதய அறுவைச் சிகிச்சை மேற்கொண்டதை அறிந்ததால், அண்மையில் நான் நோர்வே சென்றபோது, பால்ராஜ் அவர்களைப் பற்றி வினவினேன். "நலமாக இருக்கிறார்" என்றே சொன்னார்கள்.

நிகரற்ற அந்த ரணகளச் சூரன் மறைந்துவிட்டார். எந்தத் தாயக மண்ணின் விடுதலைக்காகப் போர்க்களத்தில் எதிரிகளைக் கதிகலங்கச் செய்தாரோ, அந்த மண்ணில், இதோ, அமைதியாக உறங்குகிறார். அவரது வீரமும், தியாகமும், தமிழ் ஈழ விடுதலை வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட்டு விட்டன.

இம் மாவீரர்கள் துயில்கின்ற தமிழ் ஈழ மண் விடுதலை பெற்று, சுதந்திர இறைமை உள்ள நாடாக மலரும்போது, அந்த மண்ணிலே உறங்குகிற பால்ராஜின் உடலும் சிலிர்க்கத்தான் செய்யும்.

வாழ்க, மாவீரன் பிரிகேடியர் பால்ராஜின் புகழ் என்று என் மனம் மானசீகமான முழங்கும் வேளையில் அம்மாவீரனின் கல்லறைக்கு, தாய்த்தமிழகத்தில் இருந்து என் கண்ணீரைக் காணிக்கை ஆக்குகிறேன் என்று அதில் வைகோ தெரிவித்துள்ளார்.

puthianam

வடமராட்சியில் வான்குண்டுத் தாக்குதல்: 2 பொதுமக்கள் பலி- 3 பேர் காயம்

வடராட்சி கிழக்கு சுண்டிக்குளம் கற்பாட்டுப் பகுதியில் சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் நடத்திய குண்டுத்தாக்குதலில் 2 அப்பாவிப் பொதுமக்கள் உடல் சிதறி கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 3 பேர் காயமடைந்துள்ளனர்.

கற்பாடு மக்கள் குடியிருப்புக்கள் மீது இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2:00 மணியளவில் கிபீர் வானூர்திகள் குண்டுத் தாக்குதலை நடத்தின.

இத்தாக்குதலில் அப்பகுதியில் இருந்த 10 வீடுகள் முற்றாக அழிந்தன.

வீடுகளில் இருந்த 2 அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 3 பேர் காயமடைந்துள்ளனர்.

puthinam

அம்பாறை கிளைமோர்த் தாக்குதலில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் பலி

அம்பாறை பக்மிட்டிய பகுதியில் இன்று காலை நடத்தப்பட்ட கிளைமோர்த் தாக்குதலில் சிறிலங்காப் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.

வீதி சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்த படையினரை இலக்கு வைத்து இன்று வெள்ளிக்கிழமை காலை 6:30 மணியளவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதலில் படுகாயமடைந்த படைத்தரப்பைச் சேர்ந்தவர் அம்பாறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலை அடுத்து அப்பகுதியில் பெரும் தேடுதல் நடவடிக்கையை சிறிலங்காப் படையினர் மேற்கொண்டனர்.

"த நேசன்" ஆசிரியர் மீது தாக்குதல்

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் இருந்து வெளிவரும் "த நேசன்" ஆங்கில வார ஏட்டின் பதில் ஆசிரியரும் பாதுகாப்பு நிலவர எழுத்தாளருமான கீத் நொயார் நேற்றிரவு கடத்திச் செல்லப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார்.

தலையில் காயங்களுடன் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை அவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தெகிவளையில் உள்ள அவரது வீட்டிற்கு அண்மையில் நேற்று இரவு 10:30 மணியளவில் அவர் கடத்தப்பட்டார்.

அவரது வாகனம் கைவிடப்பட்ட நிலையில் நின்றதை அவதானித்த அவரது மனைவி தனது கணவரைக் காணவில்லை என்று தெகிவளை காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

சிறிலங்கா அரச உயர்மட்டத்திற்கு இது குறித்து ஊடக அமைப்புக்களும் அழுத்தம் கொடுத்தன.

இந்நிலையில் இன்று காலை தலையில் தாக்கப்பட்ட நிலையில் கீத் நொயார் அவரது வீட்டிற்கு அண்மையில் மயக்க நிலையில் வீழ்ந்து கிடந்தார்.

அவரை உடனடியாக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அவரது உறவினர்கள் அனுமதித்தனர்.

இத்தாக்குதல் குறித்து ஊடக அமைப்புக்கள் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளன.

மகளிர் படையணியின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றியவர் பிரிகேடியர் பால்ராஜ்: கேணல் யாழினி

தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் படையணியின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றியவர் பிரிகேடியர் பால்ராஜ் என்று மாலதி படையணி சிறப்புத் தளபதி கேணல் யாழினி தெரிவித்துள்ளார்.

விசுவமடுவில் நடைபெற்ற பிரிகேடியர் பால்ராஜின் வீரவணக்க நிகழ்வில் ஆற்றிய உரையில், லெப். கேணல் விக்டர் தலைமையில் மன்னாரில் முதலாவது போர் முனையில் மகளிர் படையணி பங்கேற்றிருந்தாலும் பெரும் போர் அனுபவம் அற்ற சூழலில் கொக்காவில் சிறிலங்காப் படைத்தளம் அழிப்பில் பிரிகேடியர் பால்ராஜ் தலைமையில் மகளிர் படையணி தனது பெரும் போர் அனுபவத்தை பெறத்தொடங்கியது என்றார் கேணல் யாழினி.

அணியிசையுடன் பிரிகேடியர் பால்ராஜின் வித்துடல் நேற்று வியாழக்கிழமை எடுத்து வரப்பட்டது.

விசுவமடு வணிகர் சங்கத் தலைவர் அமுதன் தலைமை வகித்தார்.

பொதுச்சுடரினை விசுவமடு கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சீராளன் ஏற்றினார்.

பிரிகேடியர் பால்ராஜின் உடன்பிறப்புக்கள் சுடரேற்றி மலர்மாலை சூட்டினர்.

தளபதிகள், போராளிகளினால் மலர்மாலை சூட்டப்பட்டன.

வட்டக்கச்சி

வட்டக்கச்சி மாவீரர் மண்டபத்தில் வட்டக்கச்சி கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சின்னண்ணா தலைமையில் நேற்று வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.

பொதுச்சுடரினை மன்னார் களமுனைத் தளபதிகளில் ஒருவரான ஜான் ஏற்றினார்.

பிரிகேடியர் பால்ராஜின் உடன்பிறப்புக்கள் ஈகைச்சுடரேற்றி மலர்மாலை சூட்டினர்.

தளபதிகள் மற்றும் பொறுப்பாளர்கள் மலர்மாலை சூட்டினர்.

சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி துணைத் தளபதி அமுதாப் வீரவணக்க உரையை நிகழ்த்தினார்.

puthinam

மல்லாவியில் நோயாளர் காவு வாகனம் மீது கிளைமோர்த் தாக்குதல்: 2 பேர் பலி

கிளிநொச்சி மாவட்டம் மல்லாவியில் நோயாளார் காவு வாகனம் மீது நேற்று சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியினர் நடத்திய கிளைமோர்த் தாக்குதலில் அப்பாவிப் பொதுமக்கள் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.

வெள்ளாங்குளம் - துணுக்காய் வீதியில் நேற்று வியாழக்கிழமை இரவு 8:00 மணியளவில் இக்கிளைமோர்த் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இத்தாக்குதலில் நோயாளர் காவு வாகனத்தில் சென்ற அப்பாவிப் பொதுமக்களான யோசப் யூலியன் மற்றும் யோசப் சாந்தகுமார் ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

puthinam

ஓயாத அலைகளின் தொடர் வெற்றிகளில் பிரிகேடியர் பால்ராஜின் பங்களிப்பு முதன்மையானது: கேணல் ஆதவன்

ஓயாத அலைகள் - 01, 02, 03 நடவடிக்கைளின் தொடர் வெற்றிகளில் பிரிகேடியர் பால்ராஜின் பங்களிப்பு முதன்மையானது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் படையத் தொடக்கப் பயிற்சிக் கல்லூரியின் பொறுப்பாளர் கேணல் ஆதவன் தெரிவித்துள்ளார்.

கேணல் ஆதவன் வழங்கிய நினைவுப் பகிர்வில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

குடாரப்பு தரையிறக்கத்தின் பின் இத்தாவிலில் எதிரியின் கோட்டைக்குள் படையணியை நிறுத்தி எந்த ஒரு பின்தள உதவியும் இல்லாமல் 34 நாட்கள் எதிரியைத் திணறடிக்க வைத்தவர் பிரிகேடியர் பால்ராஜ்.

தமிழ்நாட்டில் 09 ஆவது பயிற்சிப் பாசறையில பயிற்சி எடுத்தபோது, அங்கும் பயிற்சிப்பாசறையின் அணித்தலைவராக இவர் செயற்பட்டார்.

1987 ஆம் ஆண்டு இந்தியப் படையினருக்கு எதிரான தாக்குதல் காலப்பகுதியில் மணலாற்றில் மேஜர் பசீலனால்தான் பிரிகேடியர் பால்ராஜ் தமிழீழ தேசியத்லைவர் அவர்களுக்கு அறிமுகமாகின்றார்.

மேஜர் பசீலன் வீரச்சாவடைந்த பின்னர் வன்னி மாவட்டத் தளபதியாக பெறுப்பெடுத்து வன்னியில் ஏராளமான தாக்குதல்களை இந்தியப் படையினருக்கு எதிராக நடத்தியவர் அவர்.

2 ஆம் ஈழப்போரில் மாங்குளம் படைமுகாம் தாக்கி அழிக்கப்பட்டதன் வெற்றியின் பின்னணியில் பிரிகேடியர் பால்ராஜ் செயற்பட்டார்.

ஜெயசிக்குறு எதிர்ச் சமரில் நெடுங்கேணிப் பகுதியில் நின்று எதிரிக்கு பாடம் புகட்டியவர்.

ஓயாத அலைகள் - 01, 02, 03 நடவடிக்கைளின் தொடர் வெற்றிகளில் பிரிகேடியர் பால்ராஜின் பங்களிப்பு முதன்மையானது.

வடபோர் முனையில் ஓயாத அலைகள - 03 அடிக்கும் போது குடாரப்பு ஊடாக தரையிறங்கி எதிரிக்கு பலத்த அதிர்ச்சியையும் இழப்பினையும் கொடுத்தவர் பிரிகேடியர் பால்ராஜ். எந்த ஒரு பின்தள உதவியும் இல்லாமல் 34 நாட்கள் எதிரியைத் திணறடிக்க வைத்தார்.

ஆனையிறவு வெற்றிக்கு காரணமாக பிரிகேடியர் பால்ராஜின் குடாபரப்பு ஊடறுப்பு தாக்குதல் இருந்தது. அந்த வெற்றி மிகப்பெரிய சாதனையாகும் என்றார் அவர்.

puthinam

Thursday, May 22, 2008

இமாலய வெற்றிகள் பலவற்றுக்கு நடுநாயகமாக நின்று செயற்பட்டவர் பிரிகேடியர் பால்ராஜ்: தேசியத் தலைவர் புகழாரம்

இமாலய வெற்றிகள் பலவற்றுக்கு நடுநாயகமாக நின்று செயற்பட்டவர் பிரிகேடியர் பால்ராஜ் என்று தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் புகழாரம் சூட்டியுள்ளார்.

தமிழீழ தேசியத் தலைவர் விடுத்துள்ள அறிக்கை:

தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
மே 21, 2008.

எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே,

விடுதலைக்கான நீண்ட பயணத்திலே எமது சுதந்திர இயக்கம் எத்தனையோ அற்புதமான தியாகங்களைப் புரிந்திருக்கிறது. எத்தனையோ வீரகாவியங்களைப் படைத்திருக்கிறது. எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறது. மகத்தான இராணுவ வெற்றிகளைக் குவித்திருக்கிறது. இந்த இமாலய வெற்றிகள் பலவற்றுக்கு நடுநாயகமாக நின்று, எமது சண்டையணிகளையும் மரபுப் படையணிகளையும் வழிப்படுத்தி, நெறிப்படுத்திச் சமராடிய எமது வீரத்தளபதி இன்று எம்முடன் இல்லை. இவரது இழப்பால் எமது தேசம் ஆற்றமுடியாத துயரத்திலும் ஆழ்ந்த வேதனையிலும் இன்று மூழ்கிக்கிடக்கிறது.

பொதுவாகவே, விடுதலை இலட்சியத்தில் பிடிப்பு ஏற்பட்டு விட்டால், எமக்கு துன்ப துயரங்கள் தெரிவதில்லை. வேதனைகள் புரிவதில்லை. உடல் உபாதைகள் அழுத்துவதில்லை. இயற்கைகூடக் குறுக்கே நிற்பதில்லை. எனது அன்புத் தளபதி பிரிகேடியர் பால்ராஜூக்கும் அப்படித்தான். ஓயாது குமுறும் சமர்க்களங்களையெல்லாம் அவன் ஓய்வில்லாது, உறக்கமில்லாது எதிர்கொண்டான். அங்கு இரவு, பகல் பாராது செயற்பட்டான். கொட்டும் மழையும் கோடையின் கொழுத்தும் வெய்யிலும் அவனைக் கட்டிப்போட்டது கிடையாது. கொடிய சண்டைக் களங்களில் எல்லாம் எத்தனையோ துன்பங்களைச் சுமந்தவாறு, எத்தனையோ நெருக்கடிகளைச் சமாளித்தவாறு, எத்தனையோ ஆபத்துக்களை எதிர்கொண்டவாறு அபாரமான மனவுறுதியோடு போராடினான்.

தலைசிறந்த போர்த்தளபதி என்ற வகையில் நான் அவனை ஆழமாக நேசித்தேன். அவன் மீது அளவுகடந்த அன்பும் பாசமும் கொண்டிருந்தேன். அவன் அறிமுகமாகிய நாளிலிருந்து அவனுள் அபூர்வ போர்ப் பண்புகளும் போர்க் குணங்களும் இயற்கையாகவே நிறைந்து கிடப்பதைக் கண்டுகொண்டேன். ஆற்றல் மிக்க, ஆளுமை மிக்க இலட்சியப் போராளியாக அவனை வளர்த்தெடுத்தேன். அபாரமான துணிவும், அசுர வேகமும், சிறந்த தாக்குதல் உத்திகளும், நேர்த்தியாகப் படை நகர்த்தும் ஆற்றலும், கூட்டுக்குலையாத குறிதவறாத செயற்பாடுகளுமாக அவன் வெளிப்படுத்திய போர்ப்பண்புகள், எமது எதிரிக்கு அச்சத்தைக் கொடுத்தன. அதேநேரம், எமது போராளிகளின் மனோதிடத்தையும் இலட்சிய உறுதியையும் மேலும் உரமாக்கின. எமது மக்களுக்கு பெரும் வெற்றிகளைத் தேடித்தந்தன.

பிரிகேடியர் பால்ராஜ் எம்மைவிட்டு எங்கும் போய்விடவில்லை. எமது தேசத்தின் சுதந்திர மூச்சாக, எம்மையெல்லாம் உள்ளிருந்து இயக்குகின்ற இலட்சிய நெருப்பாக அவன் என்றும் எம்முள் எரிந்துகொண்டிருப்பான்.

"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"
………………
(வே.பிரபாகரன்)
தலைவர்,
தமிழீழ விடுதலைப் புலிகள்.

puthinam

ஆரையம்பதியில் துணைப்படையால் 3 முஸ்லிம்கள் சுட்டுப் படுகொலை: ஊரடங்குச் சட்டம் அமுல்

மட்டக்களப்பு மாவட்டம் ஆரையம்பதியில் சிறிலங்காப் படையினருடன் சேர்ந்தியங்கும் துணைப்படையான பிள்ளையான் குழுவால் 3 முஸ்லிம்கள் இன்று பிற்பகல் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 7 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இதனால் முஸ்லிம்கள் செறிந்து வாழும் காத்தான்குடியில் பெரும் பதற்றம் நிலவுகின்றது. சிறிலங்கா காவல்துறையினரின் ஊடரங்குச் சட்டம் அங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

காத்தான்குடியில் இன்று வியாழக்கிழமை முற்பகல் பிள்ளையான் குழுவினரின் முக்கிய உறுப்பினரும் ஆரையம்பதி பிள்ளையான் குழுப் பொறுப்பாளருமான சாந்தனும் அவரது பாதுகாவலரும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

முஸ்லிம்களின் ஆதிக்கம் நிறைந்த காத்தான்குடியில் துணைப்படைக் குழுவினர் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டதனைத் தொடர்ந்து பிள்ளையான் குழுவின் ஆதிக்கம் நிறைந்த ஆரையம்பதியில் முஸ்லிம்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

அதேநேரம் ஆரையம்பதி சந்தைப் பகுதியிலும் முஸ்லிம் ஒருவரை துணைப் படைக்குழுவினர் சுட்டுக்கொன்றுள்ளதுடன் முஸ்லிம்களின் கடைகளையும் தாக்கி சேதப்படுத்தியுள்ளனர்.

சுட்டுக்கொல்லப்பட்டவர்களில் ஒருவர் ஆரையம்பதியில் தொலைத்தொடர்பு நிலையம் நடத்தி வந்த மன்சூர் என தெரியவந்துள்ளது. ஏனைய இருவரதும் பெயர் விபரங்கள் கிடைக்கவில்லை.

துணைப்படைக் குழுவின் தாக்குதலில் மேலும் 7 பே