Wednesday, June 11, 2008

அச்சத்தின் விளிம்பில் சிறிலங்காவின் தென்பகுதி மக்கள்: "த பொட்டம்லைன்" ஏடு

சிறிலங்காவில் இடம்பெற்று வரும் தொடர் தாக்குதல்களால் தென்பகுதியில் வாழும் மக்கள் பெரும் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர் என்று கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "த பொட்டம்லைன்" தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அந்த வார ஏட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஒவ்வொரு தடவையும் பொதுப் போக்குவரத்து வாகனங்களில் எனது கணவர் பயணம் செய்யும் போதும் அவர் சென்றடைந்த பின்னர் மேற்கொள்ளும் தொலைபேசி அழைப்புக்காக அச்சத்துடன் காத்திருப்பதாக இந்திகா ஜெயவிக்கிரமவின் மனைவி சமிந்திரி தெரிவித்துள்ளார்.

தற்போது இடம்பெற்று வரும் குண்டுத்தாக்குதல்களைத் தொடர்ந்து அவரது பயணம் மிகவும் ஆபத்தானதாக மாறி வருகின்றது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

மாதம் 10,000 ரூபாயாக உள்ள எனது சம்பளம் எனக்கும் மனைவி, குழந்தைக்கும் மட்டுமே போதுமானது. எனவே நான் பேருந்தில் தான் பயணம் செய்ய முடியும் என இந்திகா ஜெயவிக்கிரம தெரிவித்துள்ளார்.

அரசாங்கம், போரை நிறுத்துவதாக தெரியவில்லை. அது போருக்கு மேலதிக நிதிகளை இறைத்த படி உள்ளது. இந்த ஆண்டு 1.5 பில்லியன் டொலர்கள் போருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. போரை விரைவாக முடிப்பதற்கு இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

முடிவற்ற இந்த போர் நாட்டின் பொருளாதாரத்தை ஏப்பம் விட்டு வருகின்றது. கடந்த மே மாதம் நாட்டின் வாழ்க்கைச் செலவு 26.6 விகிதமாக உயர்ந்திருந்தது. எரிபொருள் விலை 30 விகிதத்தினாலும், பேருந்து கட்டணம் 27.7 விகிதத்தினாலும் உயர்ந்துள்ளது.

பொருளாதார நெருக்கடிகளை விட பாதுகாப்பே எமக்கு முக்கியமானது என தனியார் பேருந்து ஒன்றின் சாரதியான சுதீபா ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.

பொதுப் போக்குவரத்தைச் சூழ்ந்து வரும் ஆபத்துக்களில் இருந்து தன்னைப் பாதுகாப்பதற்கு அவர் தற்போது ஒரு உந்துருளி ஒன்றை வாங்குவதற்கு முடிவெடுத்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் இருந்து ஜெயக்கொடி நூலிழையில் உயிர் தப்பியிருந்தார்.

தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களுக்கு நான் ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

அதாவது, தனிப்பட்ட போக்குவரத்துச் சாதனங்களை பயன்படுத்துங்கள், முடிந்தால் ஈருளிகளை வாங்குங்கள் பேருந்துகளில் அல்லது தொடருந்துகளில் பயணம் செய்து ஆபத்தை தேடிக்கொள்ள வேண்டாம் என ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.

ஆனால், பொருளாதார ஆய்வாளர் அஞ்சனா கதிர்காமத்தம்பி, பங்குச்சந்தை முகவர் மோகன்தாஸ் தங்கராஜா ஆகியோர் தம்மால் பேருந்துகளில் பயணம் செய்வதை தவிர்க்க முடியாது என தெரிவித்துள்ளனர்.

வாடகைக் கார்களில் பயணம் செய்வதற்கு தனது பொருளாதாரம் ஒத்துழைக்காது என அஞ்சனா ஏஎப்ஃபி செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

ஓவ்வொரு தடவை நான் பேருந்தில் பயணம் செய்யும் போதும், பேருந்து தரிப்பிடத்தில் நிற்கும் போதும் மக்கள் கூட்டமாக நிற்கும் இடங்களை தவிர்த்துக் கொள்கின்றேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

மக்கள் அச்சத்துடன் வாழ்வதுடன், போர் பொருளாதார போராக கூர்மையடைந்துள்ளது. கொழும்பை சுற்றி வாழும் தமிழ் மக்கள் பெரும் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர்.

ஒவ்வொரு தடவை தாக்குதல்கள் இடம்பெறும் போதும் அதற்கு அருகில் உள்ள தமிழ் மக்கள் தடுத்து வைக்கப்படுவதுடன், அவர்களின் வீடுகளும் தேடுதலுக்கு உள்ளாவது வழமையானதாக மாறிவிட்டதாக தனது பெயரை குறிப்பிட விரும்பாத தமிழ் வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

வீதிகளில் உள்ள காவலரண்களில் தமிழ் மக்கள் சோதனைக்கு உட்படுவதுடன், வடக்கு - கிழக்குப் பகுதிகளில் இருந்து வந்த மக்கள் சந்தேகத்துடன் பார்க்கப்படுகின்றனர்.

கொழும்பில் பிறந்த நாமும் அவ்வாறே நடத்தப்படுகின்றோம் என்று தமிழ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த வருடத்தில் 339 படையினர் கொல்லப்பட்டதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இரு தரப்பினரும் படைத்துறை ரீதியாக பலவீனமாகும் வரையில் மோதல்கள் நிற்கப்போவதில்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

puthinam

0 comments: