Tuesday, June 24, 2008

மூதூர் படுகொலை: அனைத்துலக விசாரணையை எதிர்நோக்கும் சிறிலங்கா

திருகோணமலை மாவட்டம் மூதூரில் படுகொலை செய்யப்பட்ட தொண்டர் அமைப்பு பணியாளர்களின் விசாரணைகளை அனைத்துலக நீதிமன்றத்தில் மேற்கொள்வதற்கான ஆதரவுகளை பிரான்ஸ் அனைத்துலக சமூகத்திடம் எதிர்பார்த்து வருவதாக பட்டினிக்கு எதிரான அமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் பிரான்ஸ் பட்டினிக்கு எதிரான அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது:

எமது அமைப்பின் வேண்டுகோளுக்கு அமைய அனைத்துலக விசாரணைகளுக்கு தேவையான அனைத்துலக சமூகத்தின் ஆதரவுகளை திரட்டுவதற்கு ஆதரவளிப்பதாக பிரான்ஸ் நாட்டின் வெளிவிவகார அமைச்சர் பேர்னாட் குச்சுனர் தெரிவித்துள்ளார்.

இந்த விசாரணைகளுக்கான ஆதரவுகளை வழங்குவதற்கு பிரான்ஸ் முன்வந்துள்ளது.

எதிர்வரும் ஜூலை 1 ஆம் நாள் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைப் பொறுப்பை பிரான்ஸ் ஏற்ற பின்னர், இது தொடர்பில் தொடர்ச்சியான பேச்சுக்கள் பிரான்ஸ் அரச அதிகாரிகளுக்கும், ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளுக்கும் இடையில் நடைபெறவுள்ளன.

"மூதூர் படுகொலைக்கான நீதி" என்ற பட்டினிக்கு எதிரான அமைப்பின் போராட்டம் பிரான்ஸ் அரசின் கவனத்தை ஈர்த்துள்ளது.

எனவே அனைத்துலக விசாரணைகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் முகம்கொடுக்க வேண்டிய சூழ்நிலைகள் அதிகரித்துள்ளன.

இதற்கான நடவடிக்கைகளை பிரான்ஸ் அரசு முன்னெடுத்து வரும் போதும் எமது அமைப்பும் அனைத்துலகத்தின் கவனத்தைப்பெறும் வண்ணம் தனது போராட்டத்தை அனைத்துலக ரீதியில் தொடர்ந்து முன்னெடுத்து வரும்.

இதற்கான நடவடிக்கைகளை நாம் படிப்படியாக முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம். முதலில் பிரான்ஸ் அரசாங்கத்திடமே கோரிக்கைகளை விடுத்துள்ளோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்துலக விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, கடந்த 17 ஆம் நாள் இந்த போராட்டத்தை பட்டினிக்கு எதிரான அமைப்பு ஆரம்பித்திருந்தது.

மூதூர் படுகொலைகள் தொடர்பான விசாரணைகளை சிறிலங்கா அரசாங்கம் இழுத்தடித்து வருவதாக தெரிவித்த பட்டினிக்கு எதிரான அமைப்பு, இலங்கையிலிருந்து கடந்த மார்ச் மாதம் வெளியேறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

நன்றி: புதினம்

0 comments: