சிறிலங்காவின் போரிடும் ஆற்றல் கொண்ட படையணிகள் எல்லாம் எமது காலடியில் வந்து நிற்கின்றன என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கை முன்னெடுப்பு பிரிவுப் பொறுப்பாளர் சி.எழிலன் தெரிவித்துள்ளார்.
பரந்தனில் நேற்று நடைபெற்ற வீரமுரசு நிகழ்வில் அவர் ஆற்றிய சிறப்புரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
யாழ்ப்பாணத்தில் தற்போது விடுதலைப் புலிகள் தாக்குதலை தொடுத்து, தரையிறங்குவார்கள் என்ற அச்ச உணர்வில் யாழ். குடா கடல் தொழிலாளர்கள் கடலில் சென்று மீன்பிடிக்க சிறிலங்கா அரசாங்கம் தடை விதித்துள்ளது.
அத்துடன் ஊரடங்குச் சட்ட நேரத்தை அதிகரித்து மக்களை சொல்லொண்ணா துன்பத்திற்கு ஆளாக்கி வருகின்றது. யாழ். குடாநாடு மிகவும் மோசமான இறுக்கமான கட்டுக்குள் நேற்றில் இருந்து உள்ளாக்கப்பட்டுள்ளது.
இதனை விட சிறிலங்காவின் சிங்கள மக்கள் வாழும் பிரதேசங்களில் மக்கள் வரலாறு காணாத அச்ச உணர்வினை சந்தித்துள்ளனர். இவ்வாறான நிலையில் சிறிலங்கா அரசாங்கம், குறிப்பாக சரத் பொன்சேகா விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு இன்னும் சற்று தூரம்தான் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
அன்று தலைவர் அவர்களை அழித்து விட்டதாக இந்திய அரசு அறிவித்தது. ஆனால் அவரை அவர்களால் நெருங்கவே முடியவில்லை. இதே போன்றதொரு செயற்பாட்டைத்தான் தற்போது சிங்கள மக்களுக்கு சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துக்கொண்டிருக்கின்றது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் பலம் முன்பிருந்ததைப் போன்று இல்லாமல் தற்போது மேலோங்கித்தான் காணப்படுகின்றது. தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் சிறிலங்காவுக்கான பாடத்தை வெகுவிரையில் புகட்டுவார்.
நாம், இதுவரை பெறாத வெற்றி வாய்ப்பினை இன்று சிறிலங்கா அரசாங்கம், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு கொடுத்திருக்கின்றது. அது எவ்வாறு வந்துள்ளது எனில், சிறிலங்காவின் போரிடும் ஆற்றல் கொண்ட படையணிகள் எல்லாம் எமது காலடியில் வந்து நிற்கின்றன.
உலகின் போராட்டத்தை எடுத்து பார்ப்போமாக இருந்தால், அவர்கள் எப்போது வெற்றி பெற்றார்கள் எனில், ஒரு ஆக்கிரமிப்புப் படை மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களுக்குள் எப்போது காலடி எடுத்து வைத்தார்களோ அன்றுதான் அவர்கள் தோல்வியைச் சந்தித்த காலமாக மாறியிருக்கின்றது.
வியட்நாம் விடுதலைப் போராட்டத்தில் வட வியட்நாமில் எப்போது ஆக்கிரமிப்புப் படை சென்றதோ அன்று வியட்நாம் விடுதலைக்கான நாளை குறித்துக்கொண்டது.
எரித்திரியா விடுதலைப் போராட்டத்தில் எரித்திரிய மக்களின் சொந்த இடமான அஸ்மரா பிரதேசத்திற்குள் ஆக்கிரமிப்பாளர்கள் போனபோது தான் எரித்திரியா விடுதலையைப் பெற்றுக்கொள்ளும் நாளாக மாறியது.
அதேபோன்று இன்று தமிழீழத்தில் விடுதலைப் புலிகளின் கோட்டையான வன்னிக்குள் சிறிலங்காப் படை முழுப் படையினரையும் கொண்டு வந்து விட்டிருப்பது தமிழீழத்திற்கான நாளை குறிப்பதற்கான பலமாக உருவாகியுள்ளது. இதுதான் எமது வெற்றி.
இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தமிழ் மக்கள் அனைவரும் தவற விடமால் தமிழீழத்தின் வெற்றியை பெற்றெடுக்க தொடர்ந்தும் உழைக்க வேண்டும் என்றார் சி.எழிலன்.
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பரந்தன் பிரதேசத்தில் வீரமுரசு நிகழ்வு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.
தேசியப் பணிக்குழு செயலாளர் சபேசன் தலைமையில் பரந்தன் மத்தி விளையாட்டுத்திடலில் நடைபெற்ற நிகழ்வில் பொதுச்சுடரினை கிளிநொச்சி கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் கலைவாணன் ஏற்றினார்.
பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் திருவுருவப்படத்திற்கு மாவீரர் கப்டன் வீரமணியின் தாயார் சுடர் ஏற்ற, மலர்மாலையினை நாடக உருவாக்குநர் புதுவை அன்பன் சூட்டினார்.
தொடர்ந்து அரங்கத்தில் தமிழ் அரங்க கல்லூரியினரின் இசை நிகழ்வும் கலையருள் கலா மன்றத்தினரின் "ஒரு தாயின் கதை" நாடகம் கலையரசி ஆசிரியரின் நெறியாள்கையில் உருவான "சங்கநாதம்" நிகழ்வும் அரங்கேற்றப்பட்டது.
அரங்க நிகழ்வின் சிறப்புரையினை விடுதலைப் புலிகளின் கொள்கை முன்னெடுப்பு பிரிவுப் பொறுப்பாளர் சி.எழிலன் நிகழ்த்தினார்.
Puthinam.com
Friday, June 13, 2008
எமது காலடியில் சிறிலங்காவின் அனைத்துப் போரிடும் ஆற்றல் கொண்ட படையணிகள்: சி.எழிலன்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment