சண்டைக்களங்களில் கிடைக்கும் வெற்றிகள் தான் போராட்டத்தின் வெற்றியை தீர்மானிக்கும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற மேஜர் துச்சாதரனின் 8 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வில் சிறப்புரையாற்றிய போது பா.நடேசன் மேலும் தெரிவித்துள்ளதாவது:
மேஜர் துச்சாதரனின் 8 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வில் கலந்து கொண்டிருக்கின்றோம்.
ஒவ்வொரு மாவீரர்களின் நினைவு நிகழ்வில் கலந்து கொள்ளும் போதும் மாவீரர்கள் எந்த குறிக்கோளுக்காக வாழ்ந்தார்கள் எந்த குறிக்கோளுக்காக தமது உயிர்களை ஈர்ந்தார்கள் என்பதனை நினைவு கூர்வது அவசியமாகும்.
துச்சாதரனின் போராட்ட வாழ்வை எடுத்துப் பார்ப்போமானால் 9 ஆண்டுகளாக விடுதலைப் போராட்டத்தின் முதன்மைப்பணியை முன்னெடுத்துச் செல்பவராக அவர் இருந்துள்ளார்.
விடுதலைப் போராட்டம் தேசிய விடுதலைப் போராட்டமாக வளர்வதற்கு பல களமுனை வெற்றிகள்தான் காரணமாக இருந்துள்ளது.
அரசியல் நகர்வுகள், களமுனை நகர்வுகள், இராஜதந்திர நகர்வுகள் எனப் பல நகர்வுகள் வெற்றியைத் தீர்மானித்தாலும் சண்டைக்களங்களில் கிடைக்கும் வெற்றிகள், திருப்புமுனைகள் தான் எமது போராட்டத்தின் வெற்றியை தீர்மானித்திருக்கின்றன.
மேஜர் துச்சாதரனின் போராட்ட வாழ்வில் பல களச்சமர்கள் வெற்றி கொள்வதற்கு முக்கிய காரணியாக இருந்துள்ளன.
போர் முனையில் வேவுப்பணியை தொடராகச் செய்ததன் மூலம் சண்டைகள் பல வெற்றிகொண்டதற்கு இவர் முதன்மைப் பங்கு வகித்துள்ளார்.
அதிகளவு காலம் சிறிலங்காப் படைத்தளங்களுக்குள் இவரின் காலம் கழிந்திருக்கின்றது. அற்புதமான வெற்றிகளைப் பெறுவதற்கு மேஜர் துச்சாதரனின் பங்கு முதன்மையானது.
இன்றைய சூழலில் சிறிலங்காப் படையினர் பல போர்முனைகளில் போர்களைத் தொடுத்திருந்தாலும் தமிழினம் ஒரணியில் திரள்வதன் மூலம் வரலாற்று வெற்றிகளை பெற்றுக்கொள்ளலாம் என்றார் அவர்.
மேஜர் துச்சாதரனின் நினைவு நிகழ்வின் தொடக்கத்தில் பொதுச்சுடரினை தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு வேவுப்பிரிவு சிறப்புத்தளபதி சசிக்குமார் ஏற்றினார்.
தமிழீழத் தேசியக் கொடியினை அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் ஏற்றினார்.
மேஜர் துச்சாதரனின் திருவுருவப்படத்தினை தளபதி கேணல் ஜெயம் திரை நீக்கம் செய்தார்.
துச்சாதரனின் உடன்பிறப்பு அலெக்சின் துணைவியார் சுயதர்சினி சுடர்ஏற்றி மலர்மாலைச் சூட்டினார்.
மலர்மாலையினை விடுதலைப் புலிகளின் சமர் ஆய்வுப் பிரிவுப் பொறுப்பாளர் யோகி சூட்டினார்.
விழாச்சுடர்களை மாணவர் அமைப்புப் பொறுப்பாளர் கண்ணன், கல்விக்கழக துணைப் பொறுப்பாளர் புலிமறவன் ஆகியோர் ஏற்றினர்.
தமிழ்த்தாய் வாழ்த்து, வரவேற்பு நடனம், மாவீரர் நடனம் என்பன நடைபெற்றதனைத் தொடர்ந்து வரவேற்பு உரையினை துச்சாதரன் கல்வி நிலைய ஆசிரியர் சங்கரன் ஆற்றினார்.
தலைமையுரையினை ஆசிரியர் தர்சன் நிகழ்த்தினார்.
நினைவுரையை சமர் ஆய்வுப் பொறுபபாளர் யோகி ஆற்றினார்.
போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசில்களை பா.நடேசன், தளபதி கேணல் ஜெயம், சசிக்குமார், யோகி அருண் ஆசிரியர் ஆகியோர் வழங்கினர்.
அரங்கில் மாணவர்களின் கலை நிகழ்வுகள், இசை நிகழ்ச்சி ஆகியன இடம்பெற்றன.
நன்றி: புதினம்
Tuesday, June 24, 2008
சண்டைக்களங்களில் கிடைக்கும் வெற்றிகள் தான் போராட்டத்தின் வெற்றியை தீர்மானிக்கும்: பா.நடேசன்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment