Friday, June 13, 2008

யாழில் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்ட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை

யாழ்ப்பாணத்தில் அச்சுறுத்தல் காரணமாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சரணடைந்தவர்களை ஏற்றிச்சென்ற சிறைச்சாலை வாகனத்தை வழிமறித்து இன்று காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

சுன்னாகம் - புன்னாலைக்கட்டுவன் வீதியில் சன நடமாட்டம் உள்ள பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 9:30 மணியளவில் இத்துணிகரச் சம்பவம் இடம்பெற்றது.

இச்சம்பவத்தில் கரவெட்டி இராஜகிராமத்தைச் சேர்ந்த தங்கராஜா சுலோஜன் (வயது 26), செல்வராஜா லெப்டின்ராஜ் (வயது 26) ஆகியோரே கொல்லப்பட்டவர்கள் ஆவர். காயமடைந்தவர் ஜே.ரகுவரன் (வயது 24) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கொல்லப்பட்ட லெப்டின்ராஜின் தந்தையும் தாயும் மற்றும் இரண்டு சகோதரர்களும் சில வாரங்களுக்கு முன்னர் கடத்தப்பட்டுள்ளனர். இதனால் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் லெப்டின்ராஜூம் அவரது சகோதரியும் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அடைக்கலம் தேடியிருந்தனர்.

இந்நிலையிலேயே இன்று காலை லெப்டின்ராஜ் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர்கள் உயர்பாதுகாப்பு வலயப்பகுதிகளில் ஒன்றான புன்னாலைக்கட்டுவனுக்குள் ஓடித் தப்பியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அச்சுறுத்தல் காரணமாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சரணடைந்தவர்கள் யாழ். சிறைச்சாலையில் பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு தங்க வைக்கப்பட்டிருந்தவர்களையும் ஏனைய கைதிகளையும் வழக்கு விசாரணைக்காக மல்லாகம் மற்றும் பருத்தித்துறை நீதிமன்றத்தில் இன்று நடைபெறவிருந்த வழக்கு விசாரணைகளில் முன்னிலைப்படுத்துவதற்காக சிறைச்சாலை வாகனத்தில் ஏற்றிச் சென்றபோதே இச்சம்பவம் இடம்பெற்றது.

மேற்படி வாகனம் மல்லாகம் நீதிமன்றத்தில் குறிப்பிட்ட சில கைதிகளை இறக்கிய பின்னர் சுன்னாகம் - புன்னாலைக்கட்டுவன் ஊடாக பருத்தித்துறை நோக்கிச் சென்றுகொண்டிருந்த போது, புன்னாலைக்கட்டுவனுக்கு அண்மையில் உள்ள பிரதான வீதியில் வெள்ளை வானில் வந்த அடையாளம் தெரியாத ஆயுததாரிகள் இந்த வாகனத்தை ஆயுதமுனையில் வழிமறித்துள்ளனர்.

வாகனம் நிறுத்தப்பட்டதும் அதில் இருந்தவர்களை கீழே இறங்கி வருமாறு உத்தரவிட்டுள்ளனர். வாகனத்தில் இருந்து கீழ் இறங்கிய அவர்களை நோக்கி துப்பாக்கிதாரிகள் இருவர் கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டினை நடத்தியதில் அந்த இடத்திலேயே இருவர் கொல்லப்பட்டனர். ஒருவர் படுகாயமடைந்தார்.

இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது. இருவரை சுட்டுக்கொன்று விட்டு வெள்ளை வானை அந்த இடத்திலேயே விட்டுவிட்டு உந்துருளி ஒன்றில் துப்பாக்கிதாரிகள் புன்னாலைக்கட்டுவன் உயர்பாதுகாப்பு வலயப்பகுதிக்குள் ஓடித்தப்பினர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

ஆயுததாரிகளின் வெள்ளை வானை சம்பவ இடத்திற்கு வந்த படையினர் எடுத்துச் சென்றுள்ளனர்.

இச்சம்பவத்தில் கொல்லப்பட்ட இருவரின் சடலங்களும் தெல்லிப்பழை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.

மல்லாகம் நீதிபதி விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.
puthinam.com

0 comments: