நான்காம் கட்ட ஈழப்போரை எதிர்கொள்ள புதிதாக நான்கு படையணிகளை அமைத்துள்ள சிறிலங்கா இராணுவம் தற்போது ஐந்தாவது படையணியை உருவாக்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
சிறிலங்கா இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நான்காம் கட்ட ஈழப்போர் தீவிரம் பெற்று வருவதனைத் தொடர்ந்து சிறிலங்கா இராணுவம் 57, 58 (Task Force I), 59 ஆவது படையணிகளை உருவாக்கியிருந்தது.
சிறிலங்கா இராணுவம் தற்போது 61 ஆவது படையணியை உருவாக்கிவரும் நிலையில் மேலதிகமாக தாக்குதல் படைப்பிரிவு இரண்டு (Task Force II) என்ற புதிய படையணியை இராணுவம் உருவாக்கி வருகின்றது.
இந்தப் புதிய படையணிக்கு பிரிகேடியர் ரால்ஃப் நுகேரா கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முன்னர் கசவத்தாக்குதல் படையணியின் கட்டளைத் தளபதியாக பணியாற்றி வந்திருந்தார்.
தாக்குதல் படையணியாக உருவாகி வரும் இந்தப் படையணி ஓமந்தை பகுதியில் நிலைகொள்ள உள்ளது.
இதனிடையே உருவாக்கப்பட்டுள்ள 61 ஆவது படையணி தற்காப்பு தாக்குதல் படையணியாக செயற்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
57 ஆவது படையணி கைப்பற்றும் பிரதேசங்களை பாதுகாப்பதற்காக 61 ஆவது படையணி உருவாக்கப்பட்டுள்ளதுடன், தாக்குதல் படையணி இரண்டின் உருவாக்கத்துடன் மணலாறு களமுனைக்கு மேலதிகமாக மற்றுமொரு களமுனை திறக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.
சிறிலங்கா இராணுவத்தைப் பொறுத்த வரையில் மேலதிகமாக உருவாக்கப்படும் இந்தப் படையணிகளுடன், கவசத்தாக்குதல் றெஜிமென்டும் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சிறிலங்கா இராணுவத்தின் தளபதியாக லெப். ஜெனரல் சரத் பொன்சேகா பதவியேற்ற பின்னர் ஐந்து புதிய படையணிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
puthinam
0 comments:
Post a Comment