Tuesday, June 3, 2008

யாழில் படையினரின் கைக்குண்டு வெடித்து சிறுவன் பலி- 2 சிறுவர்கள் படுகாயம்

யாழ். மாவட்டம் வலிகாமம் வடக்கில் உள்ள ஏழாலையில் உயர்பாதுகாப்பு வலயத்தில் படையினர் கைவிட்டுச் சென்ற கைக்குண்டை எடுத்து விளையாடியதால் அது வெடித்துச் சிதறி சிறுவன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்ததுடன் மேலும் இரண்டு சிறுவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

ஏழாலையில் உள்ள படையினரின் உயர்பாதுகாப்பு வலயப் பகுதியிலேயே இச்சம்பவம் நேற்று மாலை 6:30 மணியளவில் இடம்பெற்றது.

மேற்படி உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ள வீதியில் ஆட்களற்ற வீடொன்றின் முன்பாக படையினர் பகல் நேரங்களில் காவலுக்கு நிற்பது வழமை.

சம்பவ நாளன்று மேற்படி வீட்டுக்குள் விளையாடுவதற்காக நுழைந்த சிறுவர்கள் அங்கு கைவிடப்பட்ட நிலையில் இருந்த கைக்குண்டை தூக்கி விளையாடிய போது அது திடீரென வெடித்துச் சிதறியது.

இதில் சம்பவ இடத்திலேயே சிறுவன் ஒருவன் உயிரிழந்தான். மேலும் இரண்டு சிறுவர்கள் படுகாயமடைந்து யாழ். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஏழாலை வடக்கைச் சேர்ந்த ஜெயராசா தர்சன் (வயது 9) என்ற சிறுவனே இச்சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளார். அதே இடத்தைச் சேர்ந்த ஜெயராசா விதுசன் (வயது 05), பிரபானந்தன் யதுசன் (வயது 06) ஆகியோரே படுகாயமடைந்தவர்கள் ஆவர்.

படையினரின் கவனயீனமே இச்சம்பவத்திற்கு காரணம் என்று சம்பவ இடத்திற்குச் சென்ற மல்லாகம் நீதிபதியிடம் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் பெற்றோர் கூறியுள்ளனர்.

நன்றி: புதினம்

0 comments: