Sunday, June 1, 2008

வெள்ளவத்தையில் கைக்குண்டுத் தாக்குதல்: 2 பொதுமக்கள் பலி- 8 பேர் காயம்- கிராண்ட்பாசில் மின்மாற்றி தகர்ப்பு

சிறிலங்கா தலைநகர் கொழும்பு வெள்ளவத்தையில் நேற்று இரவு இடம்பெற்ற கைக்குண்டுத் தாக்குதலில் 2 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 8 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக களுபோவில மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

காலி வீதி வெள்ளவத்தையில் உள்ள ஹோட்டல் றொலக்சிக்கும் ஹோட்டல் ஒமோகா இன்னிற்கும் இடையில் உள்ள பேருந்து தரிப்பிடத்திற்கு அண்மையில் உள்ள மருந்தகத்திற்கு முன்பாக இக் கைக்குண்டுத் தாக்குதல் நேற்று சனிக்கிழமை இரவு 8:50 மணியளவில் இடம்பெற்றது.

உந்துருளியில் வந்த இருவரே இக் கைக்குண்டை வீசிவிட்டுச் சென்றனர் என்று சம்பவத்தை நேரில் பார்த்தவரும், காயமடைந்தவருமான ஒருவர் தெரிவித்தார்.

இவரது நண்பர் இத்தாக்குதலில் தலையின் பின்புறத்தில் காயமடைந்த நிலையில் களுபோவில மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படும் போது வழியில் உயிரிழந்துள்ளார்.

ஹோட்டல் றொலக்சில் இரவு உணவுப் பொதியை எடுத்துக்கொண்டு வீடு செல்வதற்காக பேருந்து நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தபோதே எமக்கு அருகில் குண்டு வெடித்தது என்று சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் தெரிவித்தார்.

இக் கைக்குண்டுத் தாக்குதலில் 10 பேர் சம்பவ இடத்தில் காயமடைந்து களுபோவில மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். அவர்களில் இருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் போது உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவர் யாழ்ப்பாணம் சுண்டுக்குழியைச் சேர்ந்த வை.கீதன் என்று தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்த மற்றவரின் பெயர் விபரம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

கிராண்ட்பாசிலும் குண்டுத்தாக்குதல்

வெள்ளவத்தை கைக்குண்டு தாக்குதல் இடம்பெற்ற சில விநாடிகளில் கிராண்ட்பாஸ் வீதியில் மின்மாற்றி கபினட் ஒன்று பாரிய சத்தத்துடன் வெடித்துச் சிதறியுள்ளது.

குண்டுத்தாக்குதல் மூலமே இந்த மின்மாற்றி வெடித்துச் சிதறியிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் எவரும் பாதிக்கப்படாத போதும் சம்பவ இடத்தில் பதற்றம் நிலவியது.

ஆமர் வீதியில் இருந்து கொஸ்கஸ் சந்திப் பகுதிக்குச் செல்லும் கிராண்ட்பாஸ் வீதியிலேயே இந்த மின்னமாற்றி அமைந்திருந்தது.

சம்பவத்தை அடுத்து இந்த வீதி படையினரால் போக்குவரத்திற்கு தடைசெய்யப்பட்டது.

சம்பவம் குறித்து விசாரணைகளை நடத்துவதாக கிராண்ட்பாஸ் காவல்துறையினர் தெரிவித்தனர்.

கொழும்பில் தமிழ்மக்கள் செறிந்து வாழும் வெள்ளவத்தையிலும் கிராண்ட்பாசிலும் நேற்று இரவு இடம்பெற்ற இக் குண்டுத்தாக்குதல்களால் பதற்றமான நிலை நிலவியது.

இதேவேளை இக் குண்டுத்தாக்கதல்களையடுத்து கொழும்பு நகருக்குள் நுழையும் பிரதான வீதிகளில் சோதனைகளை அதிகப்படுத்தியிருந்த படையினர், பயணிகளின் வாகனங்களை கடுமையான சோதனைகளை நடத்தியதால் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டது.

களனி பாலத்தில் நடைபெற்ற சோதனைகளால் பல மணிநேரமாக வாகனங்கள் தரித்து நின்றதைக் காணக்கூடியதாக இருந்தது.


நன்றி: புதினம்

0 comments: