முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளத்தில் சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியினர் நடத்திய கிளைமோர்த் தாக்குதலில் 2 சிறுவர்கள் உட்பட 6 அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஒரு வயதுக் குழந்தையும் 2 சிறுவர்களும் உட்பட 4 பேர் காயமடைந்துள்ளனர்.
முல்லைத்தீவில் இருந்து புதூர் நாகதம்பிரான் கோவில் விழாவுக்கு "8 சிறீ 6109" என்ற இலக்கம் கொண்ட பழைய மொறிஸ் மைனர் காரில் சென்று கொண்டிருந்த மக்கள் மீது நேற்று திங்கட்கிழமை இரவு 8:40 மணியளவில் இக்கிளைமோர்த் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவம் மாங்குளத்திற்கும் கரிப்பட்டமுறிப்பிற்கும் இடைப்பட்ட 19 ஆம் கட்டைப்பகுதியில் நடைபெற்றது.
இதில் 2 சிறுவர்கள் உட்பட 6 பொதுமக்கள் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர்.
படுகாயமடைந்த நிலையில் 4 பேர் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் நடைபெற்று நீண்ட நேரத்திற்குப் பின்னர்தான் அப்பகுதிக்கு உதவி சென்று சேர்ந்துள்ளது.
கொல்லப்பட்டோர் விபரம்:
முல்லைத்தீவு அம்பலவன்பொக்கணை முள்ளிவாய்க்கால் பகுதிகளைச் சேர்ந்த
பசுபதிப்பிள்ளை முருகதாஸ் (வயது 33)
முருகதாசின் மகன் தனுஜன் (வயது 04)
ஐயாத்துரை வசந்தகுமார் (வயது 30)
தர்மலிங்கம் யோகேஸ்வரி (வயது 35)
கணேசலிங்கம் கனிஸ்ரா (வயது 08)
காத்தமுத்து நாகராசா (வயது 53)
காயமடைந்தோர் விபரம்:
கொல்லப்பட்ட முருகதாசின் மகன் ஜெனடி (வயது 10)
முருகதாசின் மனைவி சித்திரா (வயது 26)
வசந்தகுமார் சுஜிந்தன் (ஒன்றரை வயது)
தர்மலிங்கம் ஜினோஜினி (வயது 16)
இவர்களில் ஜினோஜினி படுகாயமடைந்த நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ளார்.
சிறிலங்காப் படையினரால் பாதிக்கப்பட்டு பின்பு ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்டு முல்லைத்தீவு கரையோரப்பகுதியில் வசிக்கும் மக்களே காரில் புதூர் நாதம்பிரான் கோவில் திருவிழாவிற்கு சென்று திருப்பிக்கொண்டிருக்கையில் இந்த அவலச்சம்பவம் இடம்பெற்றது.
நன்றி: புதினம்
0 comments:
Post a Comment