Wednesday, June 11, 2008

மே மாதத்தில் 15 பொதுமக்கள் கடத்தல்

இலங்கையில் கடந்த மாதம் 15 பேர் கடத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் கண்காணிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அந்த ஆணைக்குழுவின் தலைவரும் மேலக மக்கள் முன்னணியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளதாவது:

இக்கடத்தல்கள் கொழும்பிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலுமே நடைபெற்றுள்ளன.

காவல்துறையினர் மேற்கொள்ளும் நீதிக்கு புறம்பான கைதுகளால் நகரில் வாழும் தமிழ் மக்கள் பெரும் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

கடந்த இரு நாட்களில் இரு பொதுமக்கள் கடத்தப்பட்டுள்ளனர். தவராஜா சுதாகரன் நேற்று காலை மட்டக்குளிப் பகுதியில் கடத்தப்பட்டுள்ளதுடன், வத்தளைப் பகுதியில் பெர்ணான்டார்ஸ் என்பவர் கடத்தப்பட்டுள்ளார்.

இக்காலப்பகுதியில் காவல்துறையினரால் கடத்தப்பட்ட 5 பொதுமக்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். காவல்துறையினரே அவர்களை விடுதலை செய்துள்ளனர்.

இக்கடத்தல்கள் வெள்ளை வானில் வந்தவர்களால் நிகழ்த்தப்பட்டுள்ளது என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன.

கடத்தல்கள் மிகவும் திட்டமிட்ட முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது தொடர்பாக நான் அனைத்துலக சமூகத்துடன் தொடர்புகளை கொண்டிருந்தேன். அவர்கள் இலங்கையில் இடம்பெற்று வரும் மனித உரிமை மாற்றங்களை உன்னிப்பாக அவதானித்து வருகின்றனர்.

இலங்கையில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அனைத்துலகம் விசனம் அடைந்திருப்பதனையே ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சபையில் இருந்து சிறிலங்கா வெளியேற்றப்பட்ட சம்பவம் எடுத்துக்காட்டியுள்ளது என்றார் அவர்.

puthinam

0 comments: