மனித உரிமை மீறல்கள் மோசமடைந்துள்ள நாடுகளில் இலங்கையயும் அடங்குவதாக அனைத்துலக மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
அனைத்துலக மன்னிப்புச் சபையின் 2008 ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பலவந்தமாக காணாமல் போதல், நீதிக்குப் புறம்பான படுகொலைகள், எழுந்தமானமான கைதுகள், துன்புறுத்தல்கள் என்பன 2007 ஆம் ஆண்டில் இலங்கையில் மோசமடைந்து காணப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் மனித உரிமை பிரகடனம் மேற்கொள்ளப்பட்டு 60 வருடங்களின் பின்னரும் 81 நாடுகளில் மக்கள் துன்புறுத்தல்களுக்கும், பாகுபாடுகளுக்கும் உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
54 நாடுகளில் நீதிக்குப் புறம்பான தண்டணைகள் நடைமுறைப்படுத்தப்படுவதுடன், 77 நாடுகளில் பேச்சு சுதந்திரம் அற்றும் மக்கள் வாழ்கின்றனர்.
சிறிலங்கா அரசின் தீவிரவாதத்திற்கு எதிரான செயற்பாடுகளில் மக்கள் பலவந்தமாக காணாமல் போவது அதிகரித்து வருகின்றது. படையினரும், அவர்களுடன் இணைந்து செயற்படும் ஆயுதக்குழுவினரும் இந்த கடத்தல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
2007 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் காணாமல் போனோர் தொடர்பாக பல நூறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதில் யாழ். குடாநாடு குறிப்பாக பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஓகஸ்ட் மாதத்தின் முதல் 3 வாரங்களில் 21 முறைப்பாடுகள் அங்கு மேற்கொள்ளப்பட்டிருந்தன.
வடக்கு - கிழக்குப் பகுதிகளில் மக்கள் காணாமல் போவது அரசின் தீவிரவாதத்திற்கு எதிரான செயற்பாடுகளின் ஒரு பகுதியாகும்.
கொழும்பிலும் பல கடத்தல்களும், பலவந்தமாக காணாமல் போதலும் இடம்பெற்றுள்ளன. வடக்கில் 100,000-க்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். குறிப்பாக மோதல்கள் நடைபெறும் வடபகுதியில் இது அதிகம்.
மோதல்கள் தீவிரமடையும் போது ஊடகவியலாளர்கள் மீதான தடைகளும் அதிகம். குறிப்பாக தமிழ் ஊடகவியலாளர்கள் தாக்குதலுக்கு உள்ளாவது, கடத்தப்படுவது, படுகொலை செய்யப்படுவது என்பன அதிகரித்துள்ளன. அரச தரப்பு இந்த படுகொலைகளில் ஈடுபடுபவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.
அரசுக்கு எதிராக கருத்துக்களை தெரிவிக்கும் எல்லா ஊடகவியலாளர்களும் கைது செய்யப்படுகின்றனர். இலங்கையில் சிறார் படைச் சேர்ப்புக்களும் தொடர்கின்றன. வன்முறைகளில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுப்பதில்லை எனவும், அவர்களை அடையாளம் காண்பதில் தவறிழைப்பதாகவும் சிறிலங்காவின் காவல்துறை 2007 ஆம் ஆண்டில் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி: புதினம்
0 comments:
Post a Comment