Thursday, May 29, 2008

விசாரணைக்கு சென்ற காவல்துறையினர் மீது கிளைமோர் தாக்குதல்: மூவர் படுகாயம்

வவுனியா செல்வநகரில் சிறிலங்காப் படையினருடன் சேர்ந்தியங்கும் துணைப் படைக்குழுவினரால் ரெலோ பிரமுகரான பாஸ்கரனின் மனைவி நேற்றிரவு சுட்டுக்கொல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக விசாரணைக்குச் சென்ற சிறிலங்கா காவல்துறையினர் மீது கிளைமோர்த் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பாஸ்கரனின் மனைவி மேரி யோசப், செல்வநகரில் வசித்து வந்தார். இவரது வீட்டுக்கு நேற்று புதன்கிழமை இரவு 12:00 மணியளவில் சென்ற துணைப் படைக்குழுவினர் அவர் மீது சரமாரியான துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதில் சம்பவ இடத்திலேயே மேரி யோசப் உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து இன்று விசாரணைகளை மேற்கொள்ள சிறிலங்கா காவல்துறையினர் செல்வநகர் சென்றனர்.

இவர்கள் சென்ற வாகனத்தை இலக்கு வைத்து இன்று காலை 8:45 மணியளவில் செக்கடிப்பிலவு என்ற இடத்தில் கிளைமோர்த் தாக்குதல் நடத்தப்பட்டது.

இத்தாக்குதலில் மூன்று காவல்துறையினர் படுகாயமடைந்தனர்.

இந்த இரு தொடர் சம்பவங்களை அடுத்து அப்பகுதியில் பதற்றம் நிலவுகின்றது.

0 comments: