Thursday, May 29, 2008

ரணிலுக்கு எதிராக கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம்: காவல்துறை மா அதிபரிடம் விளக்கம் கேட்கும் ஐ.தே.க.

சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக இன்று காலை வானூர்தி நிலையத்தில் கறுப்புக்கொடி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றமை குறித்து உரிய விசாரணைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு காவல்துறைமா அதிபர் விக்டர் பெரேராவிற்கு அக்கட்சி அவசர கடிதம் அனுப்பியுள்ளது.

ஐரோப்பிய சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று வியாழக்கிழமை காலை 8:00 மணியளவில் மீண்டும் கட்டுநாயக்க அனைத்துலக வானூர்தி நிலையத்தில் தரையிறங்கினார்.

கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் இருந்து அவர் வெளியேறிய போது வானூர்தி நிலையத்தில் அவருக்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தை சிறிலங்காவின் அடாவடி அமைச்சர் எனப் பெயர் எடுத்த மேர்வின் சில்வா மற்றும் வானூர்தி சேவைகள் பிரதி அமைச்சர் சரத் குமார குணரட்ண ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

ரணில் விக்கிரமசிங்க வானூர்தி நிலையத்திலிருந்து வெளியேறும்போது கறுக்கொடிகள் காட்டப்பட்டு அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் சிறிலங்காவிற்கு அங்கத்துவம் கிடைக்காமைக்கு ரணில் விக்கிரமசிங்கவே காரணம் என்று வலியுறுத்தியே இந்த கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆளும் கட்சியைச் சேர்ந்த மாகாண சபை உறுப்பினர்களும் அமைச்சர் மேர்வின் சில்வாவின் அடியாட்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

அது மட்டுமன்றி ரணில் விக்கிரமசிங்க கட்டுநாயக்க முதல் கொழும்பு வரும் பிரதான வீதியில் கறுப்புக்கொடிகளும் கட்டப்பட்டிருந்தன. இதனால் ரணில் விக்கிரமசிங்க குறுக்குப் பாதை வழியே கொழும்பை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து உடனடியாக விசாரணைகளை நடத்துமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க காவல்துறை மா அதிபருக்கு அவசர கடிதம் அனுப்பியிருக்கின்றார்.

ரணில் விக்கிரமசிங்க வி.ஐ.பி. வாசல் ஊடாக வெளியேறும்போது அந்தப் பகுதிக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் எப்படி அனுமதிக்கப்பட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்காக வானூர்தி நிலைய சொத்துக்கள் எந்த வகையில் தவறுதலாகப் பயன்பட்டுள்ளன.

ரணிலுக்குரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படாததது ஏன் என்பது போன்ற பல்வேறு கேள்விகளை தனது கடித்தத்தில் குறிப்பிட்டு அதற்கான விசாரணைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு ஐ.தே.க. பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க காவல்துறை மா அதிபருக்கு அனுப்பியிருக்கும் கடிதத்தில் வலியுறுத்திருக்கின்றார்.

அது மட்டுமின்றி ரணில் விக்கிரமசிங்க பயணித்த வானூர்தி தரையிறங்கும் நேரம் குறித்த தகவல்களை வானூர்தி சேவைகள் பிரதி அமைச்சர் சரத் குமார குணரட்ண பகிரங்கப்படுத்தி ரணிலின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கினார் என்றும் அந்த கடிதத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நன்றி: புதினம்

0 comments: