Thursday, May 29, 2008

இலங்கையில் மக்கள் கொல்லப்படுவது தொடர்பாக ஐ.நா.வின் பாதுகாப்பு சபை கவலை

இலங்கை உட்பட பல நாடுகளில் நடைபெற்று வரும் போரில் மக்கள் அதிகளவில் கொல்லப்படுவது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபை தனது கவலையை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

இலங்கை, சோமாலியா, சூடானின் டார்பர் பகுதி, பாலஸ்தீனத்தின் காசாப் பகுதி, கொலம்பியா போன்ற நாடுகளில் நடைபெறும் போரில் அதிகளவில் மக்கள் கொல்லப்படுவது தொடர்பில் பாதுகாப்புச் சபை தனது கவலையை தெரிவித்துள்ளது.

கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்ற அதன் மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நடைபெறும் போரில் அதிகளவில் மக்கள் கொல்லப்படுவது தொடர்பாக கவலை தெரிவித்துள்ள பாதுகாப்புச் சபை, எல்லாத் தரப்பினரும் மனிதாபிமான விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகள் சென்றடைவதனை பாதுகாப்பாக உறுதிப்படுத்த வேண்டும் எனவும், மக்களை பாதுகாப்பதற்கு மனிதாபிமான உதவிகள் அவசியம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடம் சிறிலங்காவிலும், டார்பர், சோமாலியா போன்ற நாடுகளிலும் பல நூறு பொதுமக்கள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளதாக ஐ.நா.வின் செயலாளர் நாயகத்தின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிநிதி ஜோன் கோம்ஸ் பாதுகாப்புச் சபை கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் சிறிலங்கா, புறுண்டி, சோமாலியா போன்ற நாடுகளில் மக்களுக்கு எந்தப் பாதுகாப்புக்களும் இல்லை என கனடா நாட்டிற்கான பிரதிநிதி ஜோன் மக்னீ தெரிவித்துள்ளார்.

இதனிடையே உலகலாவிய ரீதியில் மக்களை பாதுகாப்பதற்காக உத்தியோகப்பற்றற்ற நிபுணர் குழு ஒன்றை அமைப்பதற்கு பாதுகாப்புச் சபை தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

உலகளாவிய ரீதியில் போரில் பாதிக்கப்படும் பல மில்லியன் மக்களுக்கு உதவுவதற்கு இந்த நிபுணர் குழு அமைப்பது முன்னேற்றகரமானது என கோல்ம்ஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments: