Saturday, May 31, 2008

மேற்குலகின் பொருளாதார தடைகள் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்: சிறிலங்கா எச்சரிக்கை

மனித உரிமை மீறல்களைக் காரணம் காட்டி சிறிலங்கா மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பொருளாதார தடைகளை கொண்டு வருமாயின் நடைபெற்று வரும் நீண்டகாலப் போரில் பாரிய பாதிப்பினை ஏற்படுத்தும் என்று சிறிலங்கா அரசாங்கம் எச்சரித்துள்ளது.

இது தொடர்பில் அமெரிக்காவின் வொசிங்ரன் நகரில் இருந்து சிறிலங்காவின் அனைத்துலக வர்த்தகத்துறை அமைச்சர் ஜி.எல்.பீரீஸ் கூறியதாவது:

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்பன பல உதவி திட்டங்களை நிலுவையில் வைத்துள்ளதுடன், சிறிலங்காவிற்கான வர்த்தக சலுகைகளை நிறுத்துவது தொடர்பாகவும் விவாதங்களையும் நடத்தி வருகின்றன. மனித உரிமை மீறல்களை முன்னிலைப்படுத்தியே இந்த தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் தொடர்பான கரிசனைகளும், புரிந்துணர்வுகளும் அனைத்துலக சமூகத்திற்கு அவசியம்.

உதவிகளை நிறுத்துவது, ஜி.பி.எஸ் பிளஸ் வர்த்தக உடன்பாட்டில் இருந்து வெளியேறுவது என்பன எந்த முன்னேற்றங்களையும் ஏற்படுத்தாது. இது வறுமையை மேலும் அதிகரிக்குமே தவிர அதன் மூலம் எம்மை பலவந்தப்படுத்த முடியாது.

மேற்குலகம் ஜி.பி.எஸ் பிளஸ் உடன்பாட்டில் இருந்து விலகுமாக இருந்தால் அது பல நூறாயிரம் வறிய மக்களின் வேலை வாய்ப்புக்களை பாதிக்கும் என்றார் அவர்.

இதனிடையே சிறிலங்காவின் இனப்பிரச்சனைக்கு இராணுவத்தீர்வு சாத்தியமற்றது எனவும் அரசியல் வழிகளின் மூலம் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படவேண்டும் எனவும் அமெரிக்கா கடந்த வியாழக்கிழமை தெரிவித்துள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

நன்றி: புதினம்

0 comments: