Saturday, May 31, 2008

சிறிலங்காவில் ஜனநாயகமும், மனித உரிமைகளும் மேம்பட வேண்டும்: அமெரிக்கா

மனித உரிமைகளும், ஜனநாயகமும் மேம்பட வேண்டிய நாடுகளில் சிறிலங்காவும் அடங்கியிருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையின் அங்கத்துவத்தை சிறிலங்கா இழந்த பின்னர் அமெரிக்கா இவ்வாறு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அமெரிக்காவின் ஜனநாயக அமைப்பினால் வெளியிடப்பட்ட 2008 ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சிறிலங்காவில் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகச் செயற்பாடுகளை மேம்படுத்துவதற்கு அமெரிக்கா தனது கூட்டணி நாடுகளுடன் இணைந்து பணியாற்ற உள்ளது.

சிறுபான்மை மக்களுக்கு அதிக அதிகாரங்களை சிறிலங்கா அரசு வழங்க வேண்டும் என்பதை அமெரிக்கா வலியுறுத்துவதுடன், அதற்கான அழுத்தங்களையும் மேற்கொள்ளும்.

மனித உரிமை மீறல்களை நிறுத்துவதற்கும், ஊடக மற்றும் மத சுதந்திரங்களை மேம்படுத்துவதற்குமான அழுத்தங்களையும் அமெரிக்கா மேற்கொள்ளும். சுதந்திரமுள்ள, மனித உரிமைகளை மதிக்கும் ஜனநாயக நாடுகளின் வட்டத்தை அதிகரிப்பதே எமது நோக்கம்.

இந்த நாடுகள் மக்களின் தேவைகளை நிறைவு செய்வதுடன், அனைத்துலக விதிமுறைகளையும் மதிக்க வேண்டும்.

சிறிலங்கா முழுவதும் மனித உரிமைகள் மோசமடைந்துள்ளன.

இராணுவம், காவல்துறை மற்றும் அவர்களுடன் சேர்ந்து இயங்கும் துணை இராணுவகுழுவினர் பொதுமக்களுக்கு எதிராக தாக்குதல்கள், துன்புறுத்தல்கள், கடத்தல்கள், நீதிக்குபுறம்பான படுகொலைகள், கப்பம் அறவிடுதல், சந்தேகத்தின் பேரிலான கைதுகளில் ஈடுபடுவதாக பல அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளும் பொதுமக்கள் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: புதினம்

0 comments: