Friday, May 30, 2008

தமிழர்கள் இமாலய வெற்றி பெற தமிழகத் தமிழர்கள் எழுச்சி கொள்ள வேண்டும்: பா.நடேசன்

தமிழகத்தில் வாழ்கின்ற தமிழர்கள் எழுச்சி கொள்ளும் போது, தமிழினம் இமாலய வெற்றிகளைப் பெற முடியும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். சிங்களப் பேரினவாதிகளால் 1958 ஆம் ஆண்டு தமிழின அழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதன் 50 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வில் அவர் ஆற்றிய சிறப்புரை:

தாயகத்தில் வாழும் மக்கள் மட்டுமல்ல உலகத்தில் வாழும் 8 கோடி தமிழ் மக்களும் ஒன்றாக எழுச்சி கொள்ளவேண்டும்.

தமிழ்நாட்டில் வாழ்கின்ற தமிழ் மக்கள் பார்த்துக்கொண்டிருக்கக்கூடாது. எமக்கு ஆதரவாக குரல் கொடுப்பது மட்டுமல்லாது எழுச்சி கொள்ளவேண்டும்.

தமிழ்நாடு மட்டுமல்ல மலேசியா, சிங்கப்பூர் என உலகெல்லாம் பரந்து வாழ்கின்ற தமிழ்மக்கள், ஈழத்தமிழ் மக்களுக்காக எழுச்சி கொள்ளவேண்டும்.

உலகின் 8 கோடி தமிழ்மக்கள் உள்ளோம் நாம்.

அனைவரும் எழுச்சி கொள்வோமானால் இமயத்தையே தூக்கியெறியலாம்.

தமிழ் மக்கள் சிறிய படையணிகளைக் கொண்டு மரபுவழி படைத்தளங்களை அழித்தொழிக்கின்றோம் என்பது எமது விடுதலைப் போராட்டத்தில் தான் நிகழ்ந்து வருகின்றது. தமிழர்களால்தான் எல்லாம் முடிகின்றது.

வீரத்திற்கு இலக்கணம் வகுத்தது தமிழினம்.

உலகில் வீரத்திற்கு இலக்கணம் வகுத்தவர்களே தமிழர்கள் தான். இன்றும் வீரம் உள்ளவர்களாகவே இருக்கின்றோம்.

யாருக்கும் மண்டியிடாமல் எதனையும் விட்டடுக்கொடுக்காமல் வீரத்துடன் நாம் வாழ்ந்து வருகின்றோம்.

தமிழினம் தலைநிமிர்ந்து நிற்கின்றது எனில் ஆயுதப்போரட்டம் தொடங்காது விட்டால் இன்று முல்லைத்தீவு செம்மலை அளம்பில் கரையோரப்பகுதிகள் அனைத்தும் சிங்களப் பகுதிகளாக மாறியிருக்கும். இது தான் வரலாறு.

குடியேற்றங்கள் மூலம் தமிழர் தாயகத்தை துண்டாடுவது என்பது தமிழர் தாயகத்தை சிதைப்பதே. சிங்களத்தின் நோக்காக இருந்து வருகின்றது.

இதற்குப்பின்னால் பல சக்திகள் இருக்கின்றன. இவற்றை நாம் முறியடிக்க வேண்டும்.இன்று நாம் பலமான சக்தியாக வளர்ந்து வருகின்றோம். வெகுவிரைவில் வரலாறு பதில் சொல்லும். நாம் வெகு விரைவில் புதிய வரலாறு எழுதுவோம்.

அது உலகத்திற்கு எடுத்துக்காட்டாக இருக்கும். அடக்குமுறைக்கு துணை போகின்ற பல வல்லரசுகள் எம்மைக் கண்டு பயப்படுகின்றன. மக்கள் எம்முடன் இருக்கின்றனர்.

தமிழீழத்தில் வாழ்கின்ற மக்கள் என்றாலும் சரி தமிழகத்தில் வாழ்கின்ற மக்கள் என்றாலும் சரி புலம்பெயர்ந்து வாழ்கின்ற மக்கள் என்றாலும் சரி எம்முடன்தான் இருக்கின்றனர்.

தமிழகமும் இன்று எம்முடன்தான் இருக்கின்றது.

தமிழக மக்களை எம்முடன் தொடர்பு வைக்கவேண்டாம் என்று அண்மையில் வானொலி செய்தி ஒன்று விடப்பட்டது. அவ்வாறான தடைகளை எவ்வாறான இடர்கள் வரினும் முறியடிக்கின்ற சக்தி தமிழக மக்களுக்கு இருக்கின்றது.

அரசியல் வேறுபாடுகளை மறந்து இன உணர்வோடு தமிழக மக்கள் எமக்கு கைகொடுக்கும் காலம் கனிந்து வருகின்றது.

தமிழக மக்கள் எம்முடன் நிற்பார்கள். உலகத்தில் விடுதலையை விரும்புகின்ற மக்கள் எம்முடன் இணைந்து கொள்ளும் காலம் விரைவில் வரும் என்றார் பா. நடேசன்.
நன்றி: புதினம்

0 comments: